வந்தார் ஸ்ரீ காந்திமதி; அதிர்ந்தார் அன்புமணி: பா.ம.க.,வில் சம்பந்திகளின் மல்லுக்கட்டு
வந்தார் ஸ்ரீ காந்திமதி; அதிர்ந்தார் அன்புமணி: பா.ம.க.,வில் சம்பந்திகளின் மல்லுக்கட்டு
ADDED : ஜூலை 12, 2025 03:08 AM

ராமதாஸ் கூட்டிய பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை மேடை ஏற்றினார். இது, மகன் அன்புமணிக்கு, ராமதாஸ் வைத்த 'செக்' என பா.ம.க.,வினர் கூறுகின்றனர்.
குடும்ப பிரச்னையை சமாளிக்க, தன் மகளை அரசியலுக்கு கொண்டு வந்ததுடன், மருமகள் சவுமியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மகளை வரும் சட்டசபை தேர்தலில் களமிறக்கவும், ராமதாஸ் முடிவு எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
அதிருப்தி
பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம், 2024 டிச., 28ல் நடந்தது. அப்போது, பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியின் மகன் முகுந்தனை, இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு அந்த மேடையிலேயே, ராமதாசின் மகன் அன்புமணி அதிருப்தி தெரிவித்தார்.
அதன் பின்னர் தான் தந்தை, மகன் மோதல் அடுத்தடுத்து தீவிரமடைந்தது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை திண்டிவனத்திலும், சென்னை பனையூரிலுமாக நடத்திக் கொண்டு உள்ளனர்.
பா.ம.க.,வை, 1989 ஜூலை 16ல் துவங்கிய ராமதாஸ், 'என் குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். ஒரு வேளை அப்படி நடந்தால், என்னை சவுக்கால் அடியுங்கள்' என்றார்.
பின் மகன் அன்புமணியை கட்சிக்குள் கொண்டு வந்து, மத்திய அமைச்சர் பதவி - முதல்வர் வேட்பாளர் என அறிவித்தார். இது கட்சியிலும், வெளியேயும் விமர்சனத்தை உண்டு பண்ணியது.
கட்சி தலைவரானதும் அன்புமணி, அவரது மனைவி சவுமியாவை கட்சிக்குள் கொண்டு வந்ததோடு, 2024 லோக்சபா தேர்தலில் வேட்பாளராகவும் களமிறக்கினார்.
இதனால், கட்சிக்குள் இயற்கையாகவே சவுமியாவின் ஆதிக்கம் வளரத் துவங்கியது.
இது, ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ராமதாஸ் துவக்கத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கு எதிராக இருப்பதாக பலரும் முணுமுணுத்தனர். இதற்கிடையில் சமீபத்திய நிகழ்வுகளால், அன்புமணி - சவுமியா ஆகியோர் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் ராமதாஸ், தன் பழைய காலத்து கருத்துக்கு எதிராகத் தானே, தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை கட்சிக்குள் கொண்டு வந்து, தீவிர அரசியலில் களமிறக்க முடிவெடுத்துள்ளார்.
சினிமா பாடல்
அதற்கான துவக்கம் தான், ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டத்தில், ஸ்ரீ காந்திமதியை மேடை ஏற்றியது.
அடுத்த கட்டமாக, கட்சியில் பொறுப்பு வழங்கி முன்னிலைப்படுத்தவும் ராமதாஸ் முடிவு செய்துஉள்ளார்.
தேர்தலுக்கு 'ஏ' மற்றும் 'பி' படிவங்கள் வழங்குவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் தனக்கே உள்ளது என ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், மகள் ஸ்ரீ காந்திமதிக்கு 'சீட்' வழங்கி, வேட்பாளராக களமிறக்கவும் ராமதாஸ் முடிவெடுத்து உள்ளார்.
கட்சியில் தனக்கு எதிராக மல்லுகட்டும் மகன் அன்புமணியை, அவருடைய சகோதரியை வைத்தே செக் வைக்கும் திட்டம் தான் இது என, ராமதாசின் செயல்திட்டம் அறிந்த கட்சியினர் கூறுகின்றனர்.
இது குறித்து, கும்பகோணத்துக்கு கட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ராமதாசை பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ''போகப் போகத் தெரியும்; இந்த ராமதாசின் ஆவல் புரியும்,'' என, சினிமா பாடலைப் பாடி பதில் அளித்தார்.
ஆக, கட்சிக்குள் ஸ்ரீ காந்திமதியை கொண்டு வந்து, அன்புமணிக்கு எதிராக அவரை தீவிர அரசியலில் களம் இறக்கி இருப்பதை, ராமதாஸ் பாடல் வரிகள் மூலமாக சொல்லி இருப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.
அதிரடி
ராமதாசின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, தன் சகோதரி ஸ்ரீ காந்தி மதியின் அரசியலை எதிர்கொள்வது குறித்து, கட்சியினருடன் அன்புமணி ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
ஸ்ரீ காந்திமதி, பா.ம.க., தலைவர் அன்புமணியின் சகோதரி மட்டுமல்ல; அவருடைய இரண்டாவது மகன் ப்ரீத்திவனைத்தான் அன்புமணியின் மகள் சம்யுக்தாவுக்கு திருமணம் செய்துள்ளனர்.அந்த வகையில் ஸ்ரீ காந்திமதி, அன்புமணியின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.