/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
இலங்கை சுதாரித்தது; வங்கதேசம், நேபாளம் கோட்டைவிட்டன
/
இலங்கை சுதாரித்தது; வங்கதேசம், நேபாளம் கோட்டைவிட்டன
இலங்கை சுதாரித்தது; வங்கதேசம், நேபாளம் கோட்டைவிட்டன
இலங்கை சுதாரித்தது; வங்கதேசம், நேபாளம் கோட்டைவிட்டன
PUBLISHED ON : செப் 12, 2025 12:00 AM

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து, ராணுவத்தின் துணையுடன், மாணவர்களே புதிய ஆட்சியை அமைக்கும் புதிய நடைமுறை வங்கதேசத்திலும், அதைத் தொடர்ந்து, நேபாளத்திலும் உருவாகியுள்ளது. இதுபோன்ற ஒரு முயற்சியில் இருந்து இலங்கை தப்பியது. ஆனால், மற்ற இரண்டும் கோட்டை விட்டன. நம் அண்டை நாடான நேபாளத்தில் அரங்கேறி வரும் அரசியல் குழப்பங்கள், அடிப்படையாக ஜனநாயகத்தின் மீதும் அந்த நாட்டு அரசியல் அமைப்பின் மீதும் மக்களின் நம்பிக்கையை அசைத்து பார்ப்பதாக அமைந்துள்ளது.
நம் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த ஆண்டு அரங்கேறிய வன்முறை போராட்டத்துக்குப் பின், ஜனநாயக வழிமுறைகளுக்கு அப்பால் சென்று, அரசியல் அமைப்பின் கீழ் எந்தவொரு அதிகாரமும் இல்லாத முகம் தெரியாத மாணவர் குழுக்கள், அடுத்த பிரதமர் யார், அடுத்த அரசு கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவு செய்யும் அதிகாரத்தை ஒரு தலைபட்சமாக கையில் எடுத்தன.
இதில் கொடுமை என்னவென்றால், இரு நாட்டு ராணுவ தலைமைகளும் கூட இந்த மாணவர் குழுக்களை கலந்தாலோசித்து, அவர்கள் கூறும் தலைவர்களையே பிரதமராக தேர்வு செய்கின்றன.
அதிலும் குறிப்பாக வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பின், புதிதாக ஆட்சியில் அமர்ந்த 85 வயதான முகமது யூனுஸ் தான் அந்த பதவிக்கு வர வேண்டும் என்பதை மாணவர்களே முடிவு செய்தனர்.
அது மட்டுமல்ல, அவர் பிரதமர் பதவி வகிக்காமல், தலைமை ஆலோசகர் என்ற பட்டத்தையே ஏற்றுக்கொள்வார் என்பதையும் அந்த மாணவர்களே முடிவு செய்தனர்.
தற்போது நேபாளத்திலும் மற்றும் கடந்த ஆண்டு வங்கதேசத்திலும் அரங்கேறிய ஆட்சி மாற்ற போராட்டங்களின் பின்னணியை கூர்ந்து நோக்கினால், அதன் பின்னால், ஒரு மர்ம முடிச்சு உள்ளதை தெளிவாக உணர முடியும்.
இந்த இரண்டு நாடுகளுக்கு முன்பு, 2022-ல் நம் மற்றொரு அண்டை நாடான இலங்கையிலும் இது போன்றே மக்கள் போராட்டத்தின் அடிப்படையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேர்ந்தது.
சொல்லாமல் சொல்லி இவற்றில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. இந்த மூன்று நாடுகளிலும் மக்கள் போராட்டம் என்பது இளைஞர்களாலும், குறிப்பாக மாணவர்களாலும் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையில், தற்போது பதவியில் உள்ள அதிபர் அனுர குமார திசநாயக்காவின் ஆளும் ஜே.வி.பி., கட்சியின் மாணவர் அணியே முன்னணியில் இருந்தது.
கடந்த 1965-ல் துவங்கப்பட்ட சிங்கள இளைஞர்களின் இடதுசாரி போராளிகள் அமைப்பு அந்த நாட்டில், 1971 மற்றும் 1987 என இரண்டு முறை பெரிய அளவில் புரட்சிக்கு வித்திட்டது.
இதைத் தொடர்ந்து, குறிப்பாக 1987- - 89 காலகட்டத்தில், அந்நாட்டு ராணுவம் சுமார் 60,000 முதல் ஒரு லட்சம் வரையிலான ஜே.வி.பி., தொண்டர்களை கொன்று குவித்ததாக கருதப்பட்டது.
இந்த பின்னணியை கொண்ட கட்சியாய் இருந்தாலும், தற்போது நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் அரங்கேறிய வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை போல் அல்லாமல், இலங்கையில் ஆட்சி மாற்றம் 'சுமுகமாகவே' இருந்தது என்று கூட சொல்லலாம்.
என்றாலும், இலங்கையில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடந்த ஆட்சி மாற்றம், நமக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லாமல் சொல்லி சென்றிருக்கிறது.
காத்திருந்தவன் இலங்கையில், ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் போராட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. அப்போது, ஜே.வி.பி., உள்ளிட்ட இடதுசாரி குழுக்கள் ஒன்றிணைந்தோ, தனித்தோ, வன்முறை மூலம் ஆட்சியை பிடிப்பார்களோ என்ற அச்சம், அங்குள்ள அரசியல் தலைமைகளுக்கு இருந்தது.
என்றாலும், எப்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவதே போராட்டத்திற்கான தீர்வு என்ற எண்ணம் மனதளவில் பதிந்ததோ, அப்போதே, அந்நாட்டு அரசியல் தலைமைகளும் அரசு அமைப்புகளும், அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்து விட்டனர்.
இன்னும் சொல்லப்போனால், அதிபர் கோத்தபயவின் ராஜினாமாவை தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக பதவியேற்பது, பின்னர் ஒரு மாதத்துக்குள் அரசியல் சட்டத்தின் அடிப்படையில், அவரையே அதிபராக தேர்ந்தெடுப்பது போன்றவை, போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முடிவு செய்யப்பட்டன.
அதாவது, கோத்தபய ராஜினாமா செய்த கையோடு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று ஆர்வமாக இருந்த குழுக்களின் எதிர்பார்ப்பு, 'காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்' என்ற கதையாகி விட்டது.
இலங்கையை முன்னுதாரணமாக வைத்து பார்க்கும் போது, வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் மாணவர் போராட்டம் துவங்கிய இரண்டு வாரங்களில் அரங்கேறியது.
தற்போது நேபாளத்தில், அதுவே இரண்டு நாட்களாக சுருங்கி விட்டது. இது இலங்கையில் இருந்து இந்தப் போராட்டங்களின் பின்னாலிருந்த அன்னிய சூத்திரதாரி படித்துக்கொண்ட பாடத்தின் விளைவா?
அதாவது, போராட்டத்தை அதிக நாள் நீடிக்க வைத்து, அதன் மூலம் நாடு முழுதையுமே அரசியல் தலைமைகளுக்கும் அவர்களது ஆட்சி முறைகளுக்கும் எதிராக திருப்பி விடலாம் என்று அந்த யாரோ கருதி செயல்பட்டால், உள்நாட்டு அரசியல்வாதிகள் அவர்களை விட புத்திசாலிகள் என்பதை இலங்கையில் நிரூபித்தார்கள் எனலாம்.
இந்த பின்னணியில், அரசு மாற்றம், அரசியல் அமைப்பின் கீழ் நடைபெறாமல், முகம் தெரியாத மாணவர்கள் குழு என்ற பெயரில் முடிவு செய்யப்பட வேண்டுமென்றால், அரசியல்வாதிகளுக்கு அதிக அவகாசம் கொடுக்கக் கூடாது.
இலங்கையில் நடந்தேறியது போல் அல்லாமல், அரசியல்வாதிகள், அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினரை வன்முறையாக தாக்கி, அவர்கள் அனைவருக்குமே உயிர் பயம் ஏற்படும் நிலைமையை தோற்றுவித்தால், அதன் மூலமே அந்த அன்னிய சக்தி தனக்கு தோன்றிய வழியில் அந்தந்த நாடுகளில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமையை தோற்றுவிக்கலாம்.
இதனால், அந்த சூத்திரதாரிகள் அடைய போகும் அரசியல் அல்லது பொருளாதார லாபம் என்ன என்பது குறித்த தெளிவு இல்லை.
நேபாளம் ஆகட்டும், வங்கதேசம் ஆகட்டும், முன்னர் இலங்கை ஆகட்டும் இந்த மூன்று நாடுகளிலுமே, போராட்டத்திற்கு பின்னரான அரசியல் பயண திசையை, அந்தந்த நாட்டின் ராணுவமே முடிவு செய்தது. அதுவே இன்னமும் நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் தொடருகிறது.
இலங்கையில் மட்டும், கிடைத்த நேரத்தில் அரசியல் தலைமைகள் சுதாரித்துக் கொண்டதால், அந்நாட்டு ராணுவ தலைமை செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நிற்க வேண்டியாயிற்று.
இந்தப் பின்னணியை வைத்து பார்க்கும் போது, வங்கதேசத்திலும் சரி, நேபாளத்திலும் சரி, மாணவப் போராளிகளை கலந்தாலோசித்து விட்டு, ஒரு சிவிலியன் அரசையே அந்தந்த நாட்டு ராணுவம் பதவியில் அமர்த்துவதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.
அவ்வாறு இல்லையென்றால், இரு நாடுகளிலும் ராணுவமே அரசை கைப்பற்றி ஆட்சியை பிடித்திருக்கும்.
எய்தவன் எங்கோ இருக்க, அம்பை மட்டும் நோவானேன்?
- என் சத்தியமூர்த்தி சர்வதேச அரசியல் ஆய்வாளர்