ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் பாரத பூமி: சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் பாரத பூமி: சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
ADDED : நவ 18, 2025 04:25 AM

''பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார முன்னேற்றத்துடன் இணைந்தால், வளர்ச்சி என்பது வலிமையாகவும், நிலையானதாகவும் இருக்கும்,'' என, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி அருளாசி வழங்கினார்.
டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, ஜி.எம்.ஆர்., ஏரோசிட்டி பணியாளர்களுக்கு வழங்கிய அருளாசியுரை:
துயரம் நீங்கவில்லை தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், மனிதர்களின் துயரம் இன்னும் நீங்கவில்லை. எத்தகைய கண்டுபிடிப்பாலும், மனிதனின் துயரங்களை நீக்க முடியாது. வெளிப்புற சுகங்கள் ஒரு போதும் நிலையான மகிழ்ச்சியை அளிக்காது.
தர்மத்தின் அடிப்படையில் வாழும் நேர்மையான வாழ்க்கை, உண்மையான ஆனந்தத்தை அருள்கிறது; நிலையாகவும் வைக்கிறது.
கால மாற்றம், தொழில்நுட்பம், முன்னேற்றம் போன்றவற்றால் தர்மம் ஒரு போதும் மாறாது. நாம் அனைவரும் அந்தப் பரமானந்தத்தின் சிறு அனுபவத்தை, தினமும் ஆழ்ந்த நித்திரையில் அனுபவிக்கிறோம். நிரந்தர ஆனந்தமான, மோட்சம் பெற, ஆன்மிக பயிற்சிகளே சரியான வழி.
செல்வம் சேர்ப்பதும், புகழுடன் கூடிய பதவியை அடைவதும் நிரந்தர ஆனந்தத்தை தராது. அன்றாடம் நல்ல செயல்களில் ஈடுபடுவதே, உண்மையான ஆனந்தத்தை அளிக்கும்.
ஆதிசங்கரர் உபதேசம் பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம்.
பொருளாதார முன்னேற்றத்துடன் இணைந்தால், வளர்ச்சி என்பது வலிமையாகவும், நிலையானதாகவும் இருக்கும். அதை அடைவதற்கு ஆதிசங்கரரின் உபதேசங்கள் இன்றும் பொருந்தி நிற்கின்றன.
ஆதிசங்கரர் உலக புகழ்பெற்ற ஜகத்குரு. அவரது உபதேசங்கள் எல்லா காலத்திலும், எல்லா மக்களுக்கும் நிரந்தர வழிகாட்டியாக விளங்குகின்றன. பகவத் கீதைக்கும், உபநிஷத்துக்கும் ஆதிசங்கரர் எழுதிய பாஷ்யங்கள், மனித வாழ்க்கையின் சிக்கல்களுக்கும், உலக பிரச்னைகள் அனைத்துக்கும் பொருந்தும். இவ்வாறு சுவாமி அருளுரை வழங்கினார்.
- நமது நிருபர் -

