பெருமாளை பட்டினி போட்ட பிரசாத ஸ்டால் உரிமையாளர்: ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி
பெருமாளை பட்டினி போட்ட பிரசாத ஸ்டால் உரிமையாளர்: ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 06, 2026 05:02 AM

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில், நைவேத்தியத்தை பிரசாத ஸ்டாலில் வைத்து, அதன் உரிமையாளர் விற்பனை செய்து விட்டதால், ஐந்து மணிநேரம் பெருமாள் பட்டினியுடன் காத்திருந்ததும், பின்னர் அவசரமாக தயாரிக்கப்பட்ட பிரசாதம் படைக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின், 2ம் பகுதியான ராப்பத்து உற்ஸவம் நடந்து வருகிறது. தினமும் மதியம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, பரமபதவாசல் கடந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.
அவர் மண்டபத்திற்கு வந்த பின்னர் மதியம் 3:30 மணிக்கு திரையிடப்பட்டு, வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தின் போது மட்டுமே செய்யப்படும், செல்வர் அப்பம் மற்றும் வழக்கமான சர்க்கரைப்பொங்கல், பெருமாள் தோசை, சம்பார தோசை, வெண்பொங்கல் ஆகியவை வைத்து பெருமாளுக்கு அலங்கார அமுது படைப்பது வழக்கம்.
இதில், செல்வர் அப்பம் செய்வதற்கான பொருட்களை, பிரசாத ஸ்டால் ஒப்பந்தத்தாரர், அன்றைய தினம் அதிகாலை கொடுத்துவிடுவார். அதை வைத்து மடப்பள்ளியில் தயார் செய்து பெருமாளுக்கு படைக்கப்படும்.
அதன்படி, ராப்பத்து உற்ஸவத்தின், 4ம் நாளான நேற்று முன்தினம், வழக்கம் போல், மற்ற அமுதுகளுடன், மூன்று கூடை செல்வர் அப்பம் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. மதியம் 3:30 மணிக்கு நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த பின்னர் திரையிடப்பட்டு, செல்வர் அப்பத்தை தேடிய போது அங்கு கொண்டு வரப்படவில்லை.
இதனால் பரபரப்பு ஏற்பட, மீண்டும் மடப்பள்ளிக்கு சென்று பார்த்த போது அங்கும் இல்லை. பெருமாளுக்கு செய்த மூன்று கூடை செல்வர் அப்பமும் எங்கு சென்றது; என்ன ஆனது என்று தெரியாமல் பட்டர்கள் திகைத்தனர்.
சிறப்பு செல்வர் அப்பம் இல்லாமல், அமுது படைக்க முடியாமல், பெருமாள் பட்டினியுடன் காத்திருந்தார். அடுத்து தொடங்க வேண்டிய அரையர் சேவையும் நடைபெறவில்லை. மேலும், பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதுகுறித்து, பட்டர்கள், கோவில் அலுவலர்கள் விசாரித்த போது தான், பிரசாத ஸ்டாலை சேர்ந்தவர்கள், மடப்பள்ளியில் இருந்து, மூன்று கூடை செல்வர் அப்பத்தையும் எடுத்துச்சென்று கோவில் பிரசாத ஸ்டாலில் வைத்து, ஒவ்வொன்றையும், 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, அவர்களிடம் கேட்டதற்கு, 'ஆமாம்; நாங்கள் தான் தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டோம். வேண்டுமானால் பொருட்கள் தந்து விடுகிறோம். மீண்டும் செய்து கொள்ளுங்கள்' என, கூலாக கூறியுள்ளனர்.
இதனால், அங்கு இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது. வேறு வழியின்றி, மீண்டும் பொருட்களை வாங்கி, பட்டர்கள் பலரும் சேர்ந்து மடப்பள்ளியில் அவசர, அவசரமாக செல்வர் அப்பங்களை தயாரித்தனர். ஐந்து மணி நேர தாமதத்திற்கு பின், இரவு, 8:30 மணிக்கு நம்பெருமாளுக்கு அமுது படைத்தலும், அதன் பிறகு அரையர் சேவையும் நடந்தது.
ஏற்கனவே, ஸ்ரீரங்கம் கோவில் பிரசாத ஸ்டால் தொடர்பாக பல்வேறு புகார்கள், சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில், பெருமாளுக்கு வைக்கப்பட்டிருந்த நைவேத்தியம், பிரசாத ஸ்டாலில் விற்பனை செய்த விவகாரம் கோவில் வட்டாரத்திலும், பக்தர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாள் பிரசாதத்தில் ஏற்பட்ட இந்த பிரச்னையில், அமைச்சர்கள், அதிகாரிகள் முழு விசாரணை நடத்தி, உடனே நடவடிக்கை எடுக்கவும், இனி இப்படி நடக்காமல் கண்காணிக்கவும் வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

