வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை: அண்ணாமலை
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை: அண்ணாமலை
ADDED : அக் 29, 2025 04:33 AM

சென்னை: 'நாடு முழுதும் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்துள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் காட்டும் பயங்கரமான, இரட்டை நிலைப்பாடுகளும், சதி திட்டம் என்ற அவரின் அனுமானமும் , அவருக்கு புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது.
இது, முதல் முறை அல்ல. இதற்கு முன், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 13 முறை வாக்காளர்கள் பட்டியல்களில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பீஹாரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின், வாக்காளர் பட்டியல் நீக்கம் குறித்து, ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவின் கற்பனையை, ஸ்டாலின் நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில், தேஜஸ்வி தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார். அவரது புகைப்படத்துடன் கூடிய பெயர் பட்டியலில் இருந்தது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன், வாக்காளர்கள் பட்டியல் திருத்தத்திற்காக, சென்னை உயர் நீதிமன்ற தலையீட்டை நாடியதை, ஸ்டாலின் மறந்து விட்டாரா.
அவர், வாக்காளர் பட்டி யலில் இல்லாத, உயிரிழந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தினார்.
கடந்த, 2017ல் தி.மு.க., தமிழகம் முழுதும் உள்ள வாக்காளர் பட்டியல்களை திருத்தக்கோரி, தேர்தல் கமிஷனிடம் மனு அளித்தது. 'ஆதார்' கார்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும்.
வீடு, வீடாக, வாக்காளர்களை சரிபார்க்க வேண்டும் எனக் கோரியது. ஜனநாயகத்தின் புனிதம் என்பது, வாக்காளர் பட்டியலின் நேர்மையை சார்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

