'டபுள்கேம்' ஆடுகிறார் ஸ்டாலின்: பழனிசாமி பிரசாரம்
'டபுள்கேம்' ஆடுகிறார் ஸ்டாலின்: பழனிசாமி பிரசாரம்
ADDED : ஏப் 17, 2026 05:40 AM

கோவை: ''தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில், 'டபுள்கேம்' ஆடுகிறார் ஸ்டாலின். லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழகம் பாதிக்காது,'' என்று கோவையில் அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.
கோவை காந்திபுரத்தில், அ.தி.மு.க.,வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு, அவர் பேசியதாவது: கோவையில் நீடிக்கும் சிறு தொழில் பிரச்னை தீர்க்கப்படும். அ.தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ரேஷனில் தரமான அரிசி பருப்பு வழங்கப்படும்.
அதிகாரிகள், இனியும் தி.மு.க., ஆட்சி தொடரும் என்ற நினைப்பில் இருக்கக் கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். கரூரில் பொய் வழக்கு போடுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், போடப் போட்ட பொய் வழக்கு அனைத்தையும் தோண்டி எடுப்பேன். உரிய நடவடிக்கை எடுப்பேன். தவறாக நடக்கும் அதிகாரிகளை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். முன்பிருந்த பழனிசாமி வேறு; இப்போது இருக்கும் பழனிசாமி வேறு.
தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களுக்காக செய்யவில்லை. சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி தேவையா என்று மக்கள் யோசிக்க துவங்கியுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில், 'டபுள்கேம்' ஆடுகிறார் ஸ்டாலின். லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழகம் பாதிக்காது. ஆனால், இதை எதிர்த்து வீடுகளில் தி.மு.க.,வினர் கருப்புக்கொடி கட்டுவதாக கூறியிருந்தனர். ஆனால், எங்குமே கருப்பு கொடி இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
