'ஸ்டாலின் பயத்தில் உறைந்திருக்கிறார்!': அமைச்சர் முருகன்
'ஸ்டாலின் பயத்தில் உறைந்திருக்கிறார்!': அமைச்சர் முருகன்
ADDED : ஜூன் 10, 2025 02:06 AM

சென்னை: 'எத்தனை 'ஷா' வந்தாலும், தமிழகத்தில் தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது' என்று ஜம்பம் பேசிய முதல்வர் ஸ்டாலின், பயத்தில் உறைந்து போயிருப்பதாக மத்திய அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையால், ஒட்டுமொத்த தி.மு.க.,வும் அரண்டு போயிருக்கிறது.
எதிர்பார்ப்பு
'எத்தனை ஷாக்கள் வந்தாலும், தமிழகத்தில் தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது' என்று ஜம்பம் பேசிய முதல்வர் ஸ்டாலின், பயத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது.
அமித் ஷா பேச்சால் நடுங்கி போயிருக்கும் தி.மு.க.,வினரின் பிதற்றல் பேச்சையும், அறிக்கையையும் பார்த்தாலே அனைவருக்கும் இது தெரியும்.
தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட நாள் குறிக்கப்பட்டு விட்டது. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதில், 10 சதவீதத்தை கூட நிறைவேற்றாமல், வரலாறு காணாத ஊழல் செய்து வரும் ஸ்டாலின், தன் ஆட்சியின் நாட்களை எண்ணி கொண்டிருக்கிறார்.
மதுபான ஊழலில் திளைத்து, பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் டில்லி ஆட்சிக்கு எப்படி முடிவு கட்டப்பட்டதோ, அதேபோல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி என்று, அமித் ஷா சூளுரைத்து இருக்கிறார்.
ஆம் ஆத்மி தலைவர்களைபோல், தி.மு.க.,வினரும் சிறைக்கம்பிகளை எண்ணப்போவது உறுதி. இதற்கு கட்டியம் கூறும் நிகழ்வாக அமைந்துள்ளது, அமித் ஷாவின் தமிழக வருகை. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது திண்ணம்.
ஏழைகளுக்காக பிரதமர் மோடி அரசு கொடுக்கும் பணத்தை, தமிழக நலனுக்கு செலவு செய்யாமல் தடுத்து வரும் தி.மு.க., அரசை, வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து, தமிழக மக்களும் காத்திருக்கின்றனர்.
பா.ஜ., எதிர்ப்பு என்ற பெயரில், பூச்சாண்டி அரசியல் செய்து வரும் ஸ்டாலினின் நாடகங்களை, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுமானால் நம்பலாம்; மக்கள் நம்பப்போவதில்லை.
முடிவுரை
அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்று சொல்லும் தி.மு.க., அரசுக்கு, வரும் 22ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு பதில் சொல்லும். மாநாட்டில் பங்கேற்போர், தி.மு.க., அரசுக்கு முடிவுரை எழுதுவர். தமிழகத்திலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.