இனியும் டில்லி, தமிழகம் என பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் திட்டவட்டம்
இனியும் டில்லி, தமிழகம் என பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் திட்டவட்டம்
UPDATED : மார் 22, 2026 05:33 AM
ADDED : மார் 22, 2026 04:08 AM

சென்னை: “இனியும் டில்லி, தமிழகம் என பேசி, மக்களை, முதல்வர் ஸ்டாலின் ஏமாற்ற முடியாது,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினரகன், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். சந்திப்பு குறித்து, தினகரன் அளித்த பேட்டி:
டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, பீயூஷ் கோயல் ஆகியோரை சந்தித்தேன். பீஹாரில், தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றதோ, அதுபோல, தமிழக சட்டசபை தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வெற்றி பெறுவது குறித்து பேசினோம்.
அமித் ஷா ஒவ்வொரு முறையும் சென்னை வர முடியாது. அதனால், டில்லி வந்து பேசுகிறோம். அதேபோல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் அமித் ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியிருக்கலாம்; எனக்கு தெரியாது. ஆனால், நாங்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக, அமித் ஷாவிடம் எதுவும் பேசவில்லை.
மத்திய அரசு, தமிழகத்துக்கு நிதி தரவில்லை என, முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளில், 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, மத்திய அரசு வழங்கி உள்ளது. இதை, முறையாக பயன்படுத்தவில்லை. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதியை எடுத்து, மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி உள்ளனர்.
தமிழகத்தில், தே.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க., தான் தலைமை தாங்குகிறது. ஆனால், 'தேர்தல் டில்லிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையேயான தேர்தல்' என, ஸ்டாலின் பேசி வருகிறார். இனியும் டில்லி, தமிழகம் என பேசி, மக்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

