'விவசாயி வயிற்றில் அடிக்கும் ஸ்டாலின் அரசு': த.வெ.க., தலைவர் விஜய்
'விவசாயி வயிற்றில் அடிக்கும் ஸ்டாலின் அரசு': த.வெ.க., தலைவர் விஜய்
ADDED : அக் 29, 2025 05:42 AM

சென்னை: 'நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளதுபோல, மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, தி.மு.க., ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவது உறுதி' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை இருக்கும் அரசு என்றால், அவர்கள் வாழ்வாதாரத்தை காத்து, பொருளாதார ரீதியில் உயர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்த நெல்லை, உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல், மழையில் நனையவிட்டு வீணாக்கி, அவர்கள் வயிற்றில் அடிக்கும் அரசை என்னவென்று சொல்வது?
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்று, பணத்தை கையில் பார்த்து விடாமல் தடுப் பதே, ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க., அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இது, இந்த ஆண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வேதனையாக உள்ளது.
வெற்று விளம்பரத்திற்காக, 'நானும் டெல்டாக்காரன்' என, பெருமை பேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு, ஏழை விவசாயிகள் சார்பாக, நான் ஒருசில கேள்விகளை முன்வைக்கிறேன்.
டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை, உரிய நேரத்தில் உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன?
பருவ மழையால் விவசாய பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
அதிக மழை பொழிவு இருந்தாலும், பயிர்கள் மூழ்காதபடி தண்ணீர் தானாகவே வெளியேறி, நீர் நிலைகளை சென்றடைய போதுமான வசதி ஏற்படுத்தப்படாதது ஏன்?
விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்கள், மழையில் நனைந்து வீணாகாமல், நல்ல முறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் நெல்மணிகள் வீணாகும் நிலையில், அடுத்த ஆண்டாவது அதை மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையா?
இது தெரிந்தும், ஒவ்வொரு ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு?
விவசாயிகளின் வேதனைக்கு, ஸ்டாலின் அரசு என்ன பதில் சொல்ல போகிறது?
நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன.
அதேபோல தமிழக மக்கள் மனங்களில் முளைத்து, வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு, இன்னும் வலுவாகி, மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவது உறுதி. இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

