அரசு பணத்தில் பிரசாரம் செய்யவே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: அன்புமணி
அரசு பணத்தில் பிரசாரம் செய்யவே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: அன்புமணி
ADDED : ஜூலை 17, 2025 03:03 AM

சென்னை:
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தி.மு.க.,வால் கதை, வசனம் எழுதப்பட்ட, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற மோசடி நாடகம், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் இயக்கத்தில், வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
திட்டத்தில் எந்த புதிய அம்சங்களும் இல்லை. மக்களுக்கு ஆண்டு முழுதும் கிடைக்க வேண்டிய சேவைகளை, முகாம்களுக்கு வரவழைத்து, கையேந்தி பெற வைக்கும் திட்டம் தான் இது.
இத்திட்டத்தில் வழங்கப்படும் 46 சேவைகளையும், 'இ --சேவை' மையங்களிலேயே பெற முடியும்.
எனவே, முகாம்களுக்கு மக்கள் வரமாட்டார்கள் என்பதால், பெண்களை ஈர்க்கும் வகையில், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள், இந்த முகாம்களில் மட்டுமே பெறப்படும் என, கவர்ச்சியான அறிவிப்பை, தி.மு.க., அரசு வெளியிட்டுள்ளது. உண்மையில், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தின், அப்பட்டமான வெளிப்பாடு தான், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைவது உறுதியான நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அரசு செலவில் பிரசாரம் செய்யவும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.