ஸ்டாலினின் 'சிறுகனுார் சென்டிமென்ட்': 2021 போல 2026லும் திருச்சியில் தி.மு.க., மாநாடு
ஸ்டாலினின் 'சிறுகனுார் சென்டிமென்ட்': 2021 போல 2026லும் திருச்சியில் தி.மு.க., மாநாடு
ADDED : பிப் 06, 2026 05:17 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் 'சிறுகனுார் சென்டிமென்ட்' அடிப்படையில், வரும் மார்ச் 8ம் தேதி, திருச்சியில் தி.மு.க., மாநாடு நடத்துகிறது.
கடந்த 2011 முதல் 2021 வரை, 10 ஆண்டு காலம் ஆட்சியை இழந்து நின்றது. சட்டசபை தேர்தலுக்கு முன், 2021 மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் 7ம் தேதி, திருச்சி சிறுகனுாரில், தி.மு.க., மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் தான், 'தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என ஸ்டாலின் அறிவித்தார். இந்த வாக்குறுதி, அந்த தேர்தலில் தி.மு.க., வெற்றிக்கு வழி வகுத்தது. இது, 'சிறுகனுார் சென்டிமென்ட்' என, தி.மு.க., வட்டாரத்தில் கருதப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்த சென்டிமென்ட் பிடித்து போனது. இதனால், ஆட்சிக்கு வந்ததும், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை தி.மு.க., அரசு நடத்தியது.
தற்போது, 2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், வரும் மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் 8ம் தேதி, சிறுகனுாரில் தி.மு.க., மாநாடு நடக்க உள்ளது. இதற்காக, கடந்த 1ம் தேதி பந்தல் கால் நடும் விழா நடந்தது. அப்போது பேட்டியளித்த அமைச்சர் நேரு, 'திருச்சி மாநாட்டில், 10 லட்சம் பேர் பங்கேற்பர். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் மாநாடு நடக்கும்' என்றார்.
இந்நிலையில், 'கடந்த 2021ல் அறிவித்தது போல, வரும் மார்ச் 8ல் நடக்கும் மாநாட்டிலும், தி.மு.க.,வின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ள வாக்குறுதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், மக்களை கவரும் வகையிலும் அவை இருக்கும்' என, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
மார்ச் 8-ல், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. எனவே, தி.மு.க., மாநில மாநாடு தேதி மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

