UPDATED : மார் 17, 2024 05:42 AM
ADDED : மார் 16, 2024 11:45 PM

முதுமைக்கான நிதி திட்டமிடல்களை, இளமையிலே துவங்கினால் தான், எதிர்பாராத செலவினங்களை சமாளிப்பதோடு, நிம்மதியாக பணி ஓய்வு நாட்களை கழிக்க முடியும் என்கிறார், நிதி ஆலோசகர் நிவாஸ்.
குடும்பம், வீடு, குழந்தைகள் என பிறரது தேவைகளை பூர்த்தி செய்ய ஓடி ஓடி திரும்பிப்பார்த்தால், வயது 50 தாண்டி இருக்கும். மூட்டு வலியும், முதுகு வலியும், அழையா விருந்தாளிகளாக வந்து பல்லிளிக்கும். அடிக்கடி மயக்கம் வரும். அதுவரை ஓடிக்கொண்டிருந்த கால்கள், தன் ஓட்டத்தை குறைத்துக்கொள்ளும்.
இச்சூழலில், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருந்தால், நிலைமை தலைகீழாக மாறிவிடும். இதனால் இளமையோடு இருக்கும் போதே, முதுமைக்கான திட்டமிடலை துவங்க வேண்டுமென்கிறார், நிதி ஆலோசகர் நிவாஸ்.
அவர் கூறியதாவது:
வேலைக்கு செல்பவர்கள், சுய தொழில் செய்வோர் என யாராக இருந்தாலும், வயது, பணிச்சூழல் என்ற இரு காரணிகள் அடிப்படையில், ஓய்வு பெறும் வயதை முன்கூட்டியே தீர்மானித்து விடலாம். இந்த முடிவுக்கு வந்த பிறகு, சேமிப்பை துவங்குவதால்தான், பொருளாதார சுதந்திரம் கேள்விக்குறியாகிறது.
பணியில் சேர்ந்ததில் இருந்தே, மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் சேமித்தாலே, பணி ஓய்வுக்கு பின், கை மேல் பலன் கிடைக்கும். வயது அதிகரித்த பின் சேமிக்க துவங்கினால், தொகையும் அதிகமாக சேமிக்க வேண்டியிருக்கும்.
நிறைய நிதி திட்டங்களை வங்கிகள், அஞ்சலகங்கள், எல்.ஐ.சி., தனியார் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ற திட்டங்களை தேர்ந்தெடுத்து, சேமிக்க துவங்கலாம்.
உலக நிதி அமைப்பு (world financial forum), இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கு, 8-12 சதவீதம் உயரும் என கணித்துள்ளது.
எஸ்.ஐ.பி.,களில்(SIP) முதலீடு செய்யலாம். தங்க பத்திரங்களில் முதலீடு செய்து, எட்டு ஆண்டுகளுக்கு பின், அதை நிதியாக மாற்றும் பட்சத்தில், வரி விலக்கு கிடைக்கிறது. மத்திய அரசு சார்பிலும், முதியோர்க்கான தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நிதி சார்ந்த கூடுதல் தகவல் தேவைப்படுவோர், 0422 4388 333 என்ற எண்ணிலோ, auditor@srccafirm.com என்ற இ-மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
பணியில் சேர்ந்ததில் இருந்தே, மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் சேமித்தாலே, பணி ஓய்வுக்கு பின், கை மேல் பலன் கிடைக்கும். வயது அதிகரித்த பின் சேமிக்க துவங்கினால், தொகையும் அதிகமாக சேமிக்க வேண்டியிருக்கும்.

