UPDATED : ஆக 11, 2025 07:28 AM
ADDED : ஆக 11, 2025 03:44 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த மாநில கல்விக்கொள்கை, ஒருவழியாக துாசு தட்டி வெளியிடப்பட்டு இருக்கிறது.
கடந்த 2006ல், 10ம் வகுப்பு வரை, தமிழை கட்டாயப் பாடமாக்கும் வகையில், 'தமிழ் கட்டாய பாடச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. ஆனால், 19 ஆண்டுகள் ஆகியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கூட, தமிழ் கட்டாய பாடமாக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், சாதகமான தீர்ப்பை பெற்று, தமிழை கட்டாய பாடமாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால், இந்த சட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும், மற்ற கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அப்பட்டமான பொய்யை மாநில கல்விக் கொள்கை தெரிவித்திருக்கிறது.
அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்து வரும் தி.மு.க.,வுக்கு, மொழிக்கொள்கை பற்றி பேச தகுதி கிடையாது.
பணம் இருந்தால் மட்டுமே, தனியார் பள்ளியில் சேர்ந்து ஓரளவு தரமான கல்வியை பெற முடியும் என்ற நிலையை மாற்றும் வகையில், மாநில கல்விக் கொள்கையை தயாரித்திருக்க வேண்டும்.
மாறாக, அரசு பள்ளி மாணவர்களை, தனியார் பள்ளிகளுக்கு திருப்பி விடும் கொள்கையை, தமிழக அரசு தயாரித்துள்ளது.
இது, அரசு பள்ளிகள் மேலும் சீரழியவே வழிவகுக்கும். தாய்மொழியையும் தாய்மொழிவழிக் கல்வியையும் ஊக்குவிக்காத அனைத்து கொள்கைகளும் குப்பைதான். அந்த வகையில் மாநில கல்விக் கொள்கையும், ஒரு குப்பை கொள்கைதான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.