தேர்தல் பணி தொடர்பான அறிக்கை: சாட்டையை சுழற்ற ஸ்டாலின் தயார்
தேர்தல் பணி தொடர்பான அறிக்கை: சாட்டையை சுழற்ற ஸ்டாலின் தயார்
UPDATED : ஏப் 29, 2024 12:41 PM
ADDED : ஏப் 29, 2024 04:23 AM

லோக்சபா தேர்தல் பணிகள் குறித்த விவரங்களை 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களிடம் இருந்து அறிக்கையாக கேட்டிருப்பதால் புகார்களில் சிக்கும் நிர்வாகிகள் மீது தி.மு.க., மேலிடம் சாட்டையை சுழற்ற வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது. அப்போது தமிழகத்தில் தி.மு.க., எதிர்கட்சியாக இருந்தது. 2021 சட்டசபை தேர்தலில் லோக்சபா தேர்தல் வெற்றியை போல 100 சதவீத வெற்றியை தி.மு.க., பெறவில்லை.
தி.மு.க., ஆட்சி அமைந்த பின் நடக்கும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., அணிக்கு 100 சதவீதம் வெற்றி வர வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து பலமான அணியை உருவாக்காமல் தி.மு.க., தரப்பு தடுத்து விட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் தலைமை செயலகத்திற்கு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சென்ற போது தான் முதல்வர் ஸ்டாலின் திட்டம் செயல்வடிவம் பெற்றது.
அதாவது தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைய இடமில்லை என்பதாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருப்பதால் இரு கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் தனியாக தான் அணி அமைக்கும் என்றும், அதில் ஏதாவது ஒரு அணியில் பா.ம.க., இடம் பெறுவதற்கு ராமதாசிடம் தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பரிகாரமாக வன்னியர் சங்கங்கள் தொடர்பாக பா.ம.க., தெரிவித்த சில முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல தே.மு.தி.க., தலைவராக இருந்த விஜயகாந்த் இறந்ததும் அக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பிரேமலதாவிடமும் பா.ஜ., கூட்டணியில் இடம் பெறாமல் இருக்கவும் தி.மு.க., தரப்பு கனக்கச்சிதமாக பணிகளை செய்து கொடுத்துள்ளது.
விஜயகாந்திற்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தி தே.மு.தி.க.,வினர் விரும்பியது போல அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழக அரசுக்கு எதிரான ஓட்டுக்களை எதிர்க்கட்சிகளின் ஒரே அணியில் சேரவிடாமல் சிதறும் வகையில் அணிகள் அமைக்க தி.மு.க., மறைமுக காரணமாக இருந்து வியூகம் வகுத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் தேர்தல் பணிகளையும் ஒரு ஆண்டுக்கு முன் தி.மு.க., தரப்பு திட்டமிட்டு துவக்கியது.
அதாவது 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் போன்ற பணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. லோக்சபா தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் ஆறு சட்டசபை தொகுதிக்கும் ஆறு பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், சிறப்பு மேலிட பார்வையாளர்கள் மாவட்ட வாரியாக 'வார் ரூம்' பொறுப்பாளர்கள் என பிரிக்கப்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டனர்.
தமிழகத்திலுள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் தி.மு.க., நிர்வாகிகள் மேற்கொண்ட தேர்தல் பணிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தரும்படி 234 சட்டசபை தொகுதி பார்வையாளர்களிடமும் ஆளுங்கட்சிக்கு சொந்தமான தேர்தல் வியூக நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் தரும் அறிக்கையில் மாவட்ட செயலர்கள், நகர செயலர்கள், ஒன்றிய செயலர்கள் மற்றும் பிற அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
மாநில உளவுத்துறை அளித்த அறிக்கையில் பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வடசென்னை லோக்சபா ராயபுரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க.,வை விட அ.தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுக்கள் பதிவாகிய விவரம் இடம் பெற்றுள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் இதே நிலை நீடித்தால் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால் கட்சிக்கு எதிராக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளை களை எடுக்கும் படலமும் தேர்தல் முடிவுக்கு பின் அதிரடியாக அரங்கேறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
-நமது நிருபர்-

