கனிமவளம் கடத்து.. தனி சாம்ராஜ்யம் நடத்து! புதுக்கோட்டை, கரூர் கும்பல்களின் அட்டூழியம் உச்சகட்டம்
கனிமவளம் கடத்து.. தனி சாம்ராஜ்யம் நடத்து! புதுக்கோட்டை, கரூர் கும்பல்களின் அட்டூழியம் உச்சகட்டம்
ADDED : ஜன 24, 2025 03:43 AM

கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், ஆளும்கட்சி ஆசி பெற்ற புதுக்கோட்டை 'கேங்க்' வசூல்வேட்டை நடத்தும் நிலையில், கரூர் 'டீம்' மீண்டும் களமிறங்கி உள்ளதால் கனிம வள தொழிலே ஆட்டம் கண்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகாவில் மொத்தம், 74 கல்குவாரிகள் உள்ளன. இதில், 32 குவாரிகள் கைவிடப்பட்டுள்ளன. கிணத்துக்கடவுக்கு உட்பட்ட அரசம்பாளையம், வடபுதூர், சொக்கனூர், நெ.10.முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 42 குவாரிகள் செயல்பாட்டில் உள்ளன. செயல்படும் குவாரிகளில் எராளனமான விதிமீறல்கள் உள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். பல அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
கல்குவாரியில், அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுத்தல், ஒரே 'டிரிப் சீட்' பல முறை பயன்படுத்துதல், டிப்பர் லாரியில் அதிக லோடு ஏற்றி அனுப்புவது என விதிமீறல் தொடர் கதையாக உள்ளது.
![]() |
யூனிட்டுக்கு ரூ.400
கடந்த சில மாதங்களாக, ஆளும்கட்சி ஆசி பெற்ற புதுக்கோட்டை 'கேங்க்', கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. தற்போது இந்த கும்பலுக்கு போட்டியாக, 'கரூர் கேங்க்' மீண்டும் களம் இறங்கியுள்ளது. இதில், ஒவ்வொரு குவாரியிலும் பணியாட்கள் அமர்த்தி கனிமம் ஏற்றி செல்லும் லாரியில், யூனிட் ஒன்றுக்கு 400 வீதம் வசூல் செய்யப்படுகிறது.
நாளொன்றுக்கு, 500 லாரிகள் வரை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து கனிம வளம் எடுத்துச் செல்கின்றன. தோராயமாக கணக்கிடும் போது, கனிம வளம் லோடுக்கு மட்டும், தினமும், 10 லட்சம் ரூபாய் மாமூல் வசூலிக்கின்றனர்.
![]() |
டிரிப் சீட்டுக்கு 'கப்பம்'
இதுமட்டும் இன்றி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிரிப் சீட் வழங்கும் இடத்திலும் இந்த குழு ஆதிக்கம் செலுத்துகிறது. இதில், ஒரு டிரிப் சீட் பெற வேண்டும் என்றால், 1,600 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது இதற்கென ஒரு ஆள் நியமித்து 1,600க்கு பதிலாக, 2,700 ரூபாய் வசூலிக்கின்றனர்.
இதனால், ஒரு டிரிப் சீட்டுக்கு கூடுதலாக, 1,100 ரூபாய் 'இல்லீகலாக' வருமானம் பார்க்கின்றனர். இதில், கிணத்துக்கடவு தாலுகாவுக்கு மட்டும் தினமும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு அதிகமாக டிரிப் சீட் கணக்கில் 'கப்பம்' வசூலிக்கின்றனர்.
குவாரியே அபகரிப்பு
ஒரு சில குவாரிகள் முறையாக டிரிப் சீட் வாங்கி தொழில் நடத்தி வருவதால், அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிரிப் சீட் மறுக்கப்படுகிறது. மேலும், குவாரி உரிமையாளர்களிடம், 'உங்கள் குவாரியை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு மாதம் தோறும் கரெக்டாக பணம் வந்து விடும்' என கூறுகின்றனர்.
குவாரி உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தால், மிரட்டும் தோணியில் பேசுகின்றனர். இதில், வளைந்து கொடுக்காத குவாரிகள் மீது, அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு டிரிப் சீட் கொடுக்காமல் இருப்பது, அதிக தொகை அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
![]() |
இதுபோன்ற காரணங்களால், குவாரியில் 1,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் கல், தற்போது, 500 ரூபாய் விலை அதிகரித்து 1,800 ரூபாய்கு விற்பனை ஆகிறது. இதனால் பல கட்டுமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
'டார்கெட்' நிர்ணயம்
குவாரி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: கல்குவாரியை நேர்மையாக நடத்துவது கடினமாக உள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த உயர் மட்டத்தில் இருக்கும் சிலரின் அழுத்தத்தால், அரசு அதிகாரிகள் அதிகமாக தவறு செய்கின்றனர். கட்சியினர் சிலர் அதிக லாபம் பார்க்க பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய டிரிப் சீட்டை, ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துகின்றனர். மேலும், ஆளும்கட்சி ஆதரவு உள்ள சில குவாரிகளில், இந்த டிரிப் சீட்டை தவறாக பல நாட்கள் உபயோகிக்கின்றனர். உதாரணமாக, 1ம் தேதிக்கு வழங்கப்படும் சீட்டில், திருத்தம் செய்து, 11 மற்றும் 17 என தேதிகளை மாற்றி உபயோகிக்கின்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது.
![]() |
இரு மடங்கு 'லோடு'
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் கனிமவள கற்கள், சொக்கனூர் ரோடு வழியாகவும், வீரப்பகவுண்டனூர் செக்போஸ்ட் வழியாகவும், 'எல் அண்டு டி' பைபாஸ் வழியாகவும் கேரளாவுக்கு செல்கின்றன. இதில், 6 வீல் கொண்ட லாரியில், 2.5 யூனிட் மட்டுமே கனிமவளம் லோடு ஏற்ற வேண்டும். 10 வீல் லாரியில் 4 யூனிட்; 12 வீல் லாரியில் 5 யூனிட் என அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாற்றாக, இரு மடங்கு அளவில் கனிமவளம் லோடு ஏற்றப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
- நிருபர் குழு -





