UPDATED : செப் 07, 2025 03:17 PM
ADDED : செப் 07, 2025 02:59 PM

தமிழக தொல்லியல் துறை சார்பில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், பல்வேறு புதிய வரலாற்றுத் தகவல்கள் வெளியாகி, ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், கடந்த மே மாதம் வரை, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை; தர்மபுரி மாவட்டம், சென்னானுார்; தென்காசி மாவட்டம், திருமலாபுரம்; திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டி; திருப்பூர் மாவட்டம், கொங்கல்நகரம்; புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை; கடலுார் மாவட்டம், மருங்கூர்; சிவகங்கை மாவட்டம், கீழடி ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் நேரடி தகவல்கள் உங்களுக்காக...
வெம்பக்கோட்டை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி -- கழுகுமலை சாலையில், சிவகாசியிலிருந்து 15 கி.மீ., தொலைவிலும், கழுகுமலைக்கு தெற்கில் 23 கி.மீ., தொலைவிலும், வைப்பாறு ஆற்றின் வடகரையில் உள்ளது வெம்பக்கோட்டை. இங்குள்ள அய்யனார் கோவிலுக்கு வடக்கில், 2 மீ., உயரத்தில், 25 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் வாழ்விட மேடு உள்ளது. இப்பகுதியை, உள்ளூர் மக்கள் மேட்டுக்காடு என்றும், உச்சிமேடு என்றும் அழைக்கின்றனர்.
நுண்கற்காலம்
இங்கு மேற்கொள்ளப்பட்ட தரைவழி கள ஆய்வில், நுண்கற்கால கருவிகள் நிறைய கிடைத்தன. அதனால், இப்பகுதியில் நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்தது உறுதியானது. அதை அறியும் வகையில் அகழாய்வு செய்யப்பட்டது. ஆனால், அகழாய்வு குழிகளில் அவை கிடைக்கவில்லை. இந்த இடம் ஆற்றின் அருகே இருப்பதால், ஆற்று வெள்ளத்தில், நுண்கற்கால அடையாளங்கள் அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இரும்பு காலம்
இதுவரை நடந்துள்ள மூன்று கட்ட அகழாய்வில், இரும்பு காலம் துவங்கி, சங்க காலத்திற்கு முந்தைய வரலாற்று தொடக்க காலம், சங்க காலம், வரலாற்று காலம் வரையிலான தொல் பொருட்கள் ஏராளமாக கிடைத்துள்ளன.முக்கியமாக, இந்த வாழ்விடத்தின் காலத்தை துல்லியமாக கணிக்க உதவும் கரிமப் பொருட்களும், தானியங்களும் கிடைத்துள்ளன.
தொழிலும் வணிகமும்
இங்கு வாழ்ந்த மக்கள் மணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பொருள் உற்பத்தியில் பெரிய அளவில் ஈடுபட்டதை, இங்கு கிடைக்கும் உடைந்த மணிகள், அறுக்கப்பட்ட சங்குகள் உள்ளிட்ட தொல்பொருட்களின் வாயிலாக அறிய முடிகிறது.இங்கு, சங்கு வளையல்கள், சூதுபவளம் உள்ளிட்ட அரிய வகை மணிகள்; தந்தத்தால் செய்யப்பட்ட மணிகள்; கல் பொருத்தப்பட்ட மோதிரங்கள்; தங்க காதணிகள் மற்றும் பதக்கங்கள் கிடைத்துள்ளன. அணிகலன் தொழில் இங்கு பிரதானமாக நடந்ததை, இந்த தொல்பொருட்கள் காட்டுகின்றன.இங்கு, 100க்கும் மேற்பட்ட இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளன. அருகிலேயே இரும்பு உருக்குவதற்கான உலைகள் மற்றம் கசடுகளும் கிடைத்துள்ளன. இவை, இங்கு, இரும்பு உருக்கி, கருவிகள் செய்ததை உறுதி செய்கின்றன. விளையாட்டு பொருட்களான சுடுமண் ஆட்டக்காய்கள், பகடைக்காய்கள், பந்துகள், வட்டச்சில்லுகள் கிடைத்துள்ளன. இவை தவிர, சிறிய அளவிலான சுடுமண் மனித உருவ பொம்மைகள் மற்றும் திமில் காளைகள் அதிகம் கிடைத்துள்ளன. இவை, குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை களாகவோ, வழிபாட்டு பொருட்களாகவோ இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.உற்பத்தி செய்த பொருட்களை வியாபாரமும் செய்துள்ளனர் என்பதற்கு சான்றாக, சுடுமண் முத்திரைகள் கிடைத்துள்ளன.
வணிகத் தொடர்பு
இங்கு கிடைத்துள்ள சூதுபவள மணிகள், நம் நாட்டின், குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் மட்டும் கிடைப்பதால் அவர்களுடன் வணிக தொடர்பில் இருந்ததை ஊகிக்க முடிகிறது. சூதுபவள மணிகள் கீழடியிலும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முடிந்துள்ள மூன்றாம் கட்ட அகழாய்வில், சூதுபவள பதக்கத்தில் மிக நுண்ணிய பாயும் காளை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப சூதுபவளம் ரோம் நாட்டில் அதிகளவில் கிடைப்பதால், இது, ரோமானிய பொருளாகவோ, அல்லது அதைப் பார்த்து, உள்ளூர் கலைஞர்கள் செய்ததாகவோ இருக்கலாம்.இதேபோன்ற ஆபரணங்கள், பட்டணம், அழகன்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இவை, ரோமானியர்களுடனான வணிகத் தொடர்பை விளக்குவதாக உள்ளன.
பிற பொருட்கள்
2.சிவப்பு, கருப்பு - -சிவப்பு, மெருகூட்டப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலத்தின் சான்றுகளாக கருதப்படுகின்றன.
3.வேநாடு சேரர், மதுரை நாயக்கர், செஞ்சி நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 12 செம்பு நாணயங்களுடன், ஒரு தங்க நாணயமும் கிடைத்துள்ளது. இவை, இந்த இடம் மன்னர் ஆட்சி காலம் வரை தொடர்ச்சியாக வாழ்விடமாக இருந்ததற்கு சான்றாக உள்ளன.
