தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/நெருக்கடிகளால் மூடப்பட்டு வரும் கல் குவாரிகள்

நெருக்கடிகளால் மூடப்பட்டு வரும் கல் குவாரிகள்

நெருக்கடிகளால் மூடப்பட்டு வரும் கல் குவாரிகள்

1


ADDED : அக் 04, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2026 04:36 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

தமிழக அரசு, கனிம வளங்கள் பற்றாக்குறையை தவிர்க்க, அண்டை மாநிலங்களுக்கு கனிம பொருட்கள் கொண்டு செல்ல, 3 மாதங்கள் தற்காலிக தடை விதித்தது. இந்த தடை, ஜூலை, 9 முதல், அக்., 9 வரை அமலில் இருக்கிறது. இதனால், வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை அனுப்ப முடியாமல், பல குவாரிகள் உற்பத்தியை குறைத்தன.

அதே நேரம், தமிழகத்தில், 3,000க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கிய நிலையில், சுற்றுச்சூழல் தர கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதில் தாமதம், அபராதம் உட்பட மற்ற வகை பிரச்னைகளால், குவாரிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்த வகையில், பல குவாரிகள் மூடப்பட்டு, தற்போது சில நுாறு குவாரிகளே இயங்குகின்றன. அங்கும் போதிய இருப்பு இல்லாததால், உள்ளூர் விற்பனைக்கு கூட கற்கள் அனுப்ப முடியாத நிலையே உள்ளது.

இந்த தற்காலிக தடை என்பது, எவ்வளவு கல் வெட்டி எடுக்கப்பட்டு, உடைக்கப்படுகின்றன என்பதை கண்டறிய, அரசு எடுத்த நடவடிக்கையாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில், தமிழக அரசின் வருவாயை பெருக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோட்டமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, கல் குவாரி உரிமையாளர்கள் கூறியதாவது:

குவாரி நடத்த பல வகையில் இடையூறு ஏற்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன் வெட்டி எடுத்த கற்களுக்கு, தற்போது ஏலம் எடுத்து, குவாரி நடத்துபவர் மீது ஒட்டுமொத்தமாக கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர்.

இதனால் பல குவாரிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து மூடப்பட்டும் வருகின்றன. தவிர, நீதிமன்றங்களில், பல்வேறு வகைகளில் தாக்கலாகும் வழக்குகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

கிரஷரில் உற்பத்தி செய்யப்படும் ஜல்லியை வெளியே விற்க, 'ராயல்டி' தொகை செலுத்தி, அனுமதி சீட்டு பெறப்படுகிறது. தற்போது, 'டிரான்சிட் பாஸ்' முறை கொண்டு வந்து, குறிப்பிட்ட காலத்தில் ஜல்லியை விற்க நெருக்கடி தருகின்றனர்.

விற்பனைக்கு கால அளவு கூடாது. கோடிக்கணக்கில் பணம் கட்டி ஏலம் எடுக்கிறோம். ஆனால், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணைய அனுமதி பெறவே, ஓராண்டுக்கு மேலாகிறது.

அதுவரை தொழிலை தொடங்க முடியாமல், அரசுக்கு கட்டிய பணத்திற்கு வட்டி செலுத்தி, நஷ்டம் தான் ஏற்படுகிறது. தற்போதும், ஆணைய அனுமதிக்கு, 500க்கும் மேற்பட்ட குவாரிகள் காத்திருக்கின்றன.

சென்னையில் கனிம வளத்துறை அமைச்சர் பிரபு, உயர் அதிகாரிகள், கடந்த, 22ல், தமிழக கல் குவாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியபோது, விதிமுறைகளை கடைப்பிடித்து, 100 சதவீதம் அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தினர்.

'ஒன் டைம் செட்டில்மென்ட் முறையில் அபராதம் செலுத்துகிறோம். அத்தொகையை பாதிக்கும் மேல் குறைக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தோம். அரசின், சாலை, பாலம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடக்காததால், ஜல்லி, எம்.சாண்ட் விற்பனை சரிந்துள்ளது.

அதே நேரம், அரசுக்கு வருவாயை பெருக்க, குவாரிகளில் எவ்வளவு கல் வெட்டி எடுக்கலாம் என்பதற்கான அளவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் வரைமுறை அவசியமில்லை; மாறாக கனிம வளங்கள் திருட்டுத்தனமாக விற்பதையும், அண்டை மாநிலங்களுக்கு அனுப்புவதையும் தடுத்து, அரசுக்கு கூடுதல் வருவாயை பெருக்க முடியும் என, அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள், முதல்வர் விஜயிடம் பேசி முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'குவாரி தொழிலை தொடரும் எண்ணம் இல்லை'

சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கனிமவளத்துறை கமிஷனர் பிரபு சங்கரிடம், குவாரி உரிமையாளர்கள் அளித்த மனு:

சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம் அளிக்கும் முன்பே, உள்ளாட்சி, வருவாய் உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்படுகிறது. அதை, கனிம வளத்துறை உதவி இயக்குநர் ஆய்வு செய்து பரிந்துரைக்கிறார். பின், வனம், விவசாயம், பொதுப்பணி, மின் வாரியம் உள்ளிட்ட துறைகளில் தடையில்லா சான்று வேண்டும் என, எங்களை சிரமப்படுத்தக்கூடாது.

ஏற்கனவே குவாரி அனுமதி பெற்று இயங்கி வரும் நிலையில், புதிதாக பாதுகாப்பு சுற்றளவில் வீடுகள், தொழிற்சாலைகள் அமைந்தால், அதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கக்கூடாது. தமிழகத்தில், எந்தெந்த ஆண்டு கற்களை வெட்டி எடுத்தோமோ, அதற்குரிய கன அளவிற்கு, 'சீனியரேஜ்' தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு வரைமுறைப்படுத்தினால் மட்டுமே, குவாரிகள் தொடர்ந்து இயங்கும்.

கன மீட்டர் அளவில் சீனியரேஜ் தொகை கட்டி வந்தோம். திடீரென ஒரு கன மீட்டருக்கு, 2.75 டன் என கணக்கிட்டு அபராதம் விதிப்பது வேதனை தருகிறது. இக்கட்டான சூழலில், குவாரி தொழிலை தொடரும் எண்ணம் இல்லை. அதை தவிர்க்கவும், தொழில் முடங்காமல் இருக்கவும், கட்டுமான பணிகளுக்கு ஜல்லி, எம்.சாண்ட் குறைந்த விலையில் தடையின்றி கிடைக்கவும் அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us