காற்றாலைகளுக்கு கைகொடுத்த புயல்! தமிழகத்தில் தினமும் 5 கோடி யூனிட் மின்சாரம்
காற்றாலைகளுக்கு கைகொடுத்த புயல்! தமிழகத்தில் தினமும் 5 கோடி யூனிட் மின்சாரம்
ADDED : டிச 04, 2024 04:23 AM

சென்னை : தமிழகத்தில் சீசன் முடிவடைந்த நிலையிலும், காற்றாலைகளில் இருந்து சில தினங்களாக, 5 கோடி யூனிட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. இதை முழுதும் பயன்படுத்த, அனல் மின் உற்பத்தியை மின் வாரியம் குறைத்து உள்ளது.
தமிழகத்தில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வாரியத்துக்கு விற்பதுடன், சொந்த பயன்பாட்டிற்கும் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். இந்த காலத்தில் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 8 - 10 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும்.
கடந்த அக்டோபர் முதல் காற்றின் வேகம் குறைந்ததால், காற்றாலைகளில் இருந்து, ஒரு கோடி யூனிட் மின்சாரம் கூட கிடைக்கவில்லை. அண்மையில், வட மாவட்டங்களில் கரையை கடந்த, 'பெஞ்சல்' புயலால், காற்றாலைகளில் இருந்து சில தினங்களாக அதிக மின்சாரம் கிடைக்கிறது. அதன்படி, நவம்பர், 30ல், 3 கோடி யூனிட்டுகள், இம்மாதம், 1ம் தேதி, 5.56 கோடி யூனிட்கள், 2ம் தேதி, 5.88 கோடி யூனிட்கள் கிடைத்துள்ளன.
இந்த மின்சாரத்தை முழுதுமாக பயன்படுத்த அனல் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதலை, மின் வாரியம் குறைத்து உள்ளது.
இதுகுறித்து, காற்றாலைகளை அதிகம் அமைத்துள்ள தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறுகையில், ''தமிழகத்தில், நவம்பர், டிசம்பரில் காற்று வேகம் குறைந்திருக்கும்.
''தற்போது, 'பெஞ்சல்' புயலால், காற்றாலைகள் அமைந்துள்ள இடங்களில் காற்றின் வேகம் அதிகம் இருந்ததால், காற்றாலைகளில் கூடுதல் மின்சாரம் கிடைத்துள்ளது. இது, உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது,'' என்றார்.