பஹல்காம் தாக்குதலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே வியூகம்: செயற்கைக்கோள் படங்களை வாங்கிய பாக்., தொழிலதிபர்!
பஹல்காம் தாக்குதலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே வியூகம்: செயற்கைக்கோள் படங்களை வாங்கிய பாக்., தொழிலதிபர்!
ADDED : மே 11, 2025 02:51 AM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 26 சுற்றுலா பயணியர் படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, அந்த பகுதியின் உயர்தர செயற்கைக்கோள் புகைப்படங்களை சந்தேகத்துக்கிடமான பாகிஸ்தான் - அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் வாங்கியது குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவு
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்., 22ல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் அரசும், ராணுவமும் உள்ளது என, மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
அதை உறுதி செய்யும் வகையில், 'தி பிரின்ட்' இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த, 'மாக்ஸர் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனம், செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்து தருவதில் நிபுணத்துவம் பெற்ற வணிக நிறுவனம். இதற்கு பல உலக நாடுகளும், அதன் பாதுகாப்பு அமைப்புகளும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு, பஹல்காம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான உயர்தர செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்துத் தரும்படி கூறி, கடந்த பிப்., 2 முதல் 22ம் தேதி வரை கிட்டத்தட்ட 12 ஆர்டர்கள் வந்துள்ளன.
இதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு ஜூன் முதலே பஹல்காம் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்துத் தரச் சொல்லியும் ஆர்டர்கள் வந்துள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த 'பிசினஸ் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனல்' என்ற புவிநிலை ஆய்வு நிறுவனம் தான், இந்த ஆர்டர்களை வழங்கியதா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை.
ஆனால், இதன் நிறுவனரான ஒபைதுல்லா சயீத்தின் கடந்த காலத்தைப் பார்க்கும்போது, அவரது நிறுவனம் தான் இத்தகைய ஆர்டர்களை கொடுத்திருக்க முடியும் என்ற சந்தேகத்தை பாதுகாப்பு துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், இந்த ஒபைதுல்லா சயீத் முன்னதாக, பாகிஸ்தான் அணுசக்தி துறைக்கு தேவைப்படும் அதிவேக திறன் கொண்ட கணினிகளையும், மென்பொருட்களையும் அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துள்ளார். இந்த நடவடிக்கைக்காக அவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையும் பெற்றுள்ளார்.
மாக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணையதளத்தில், பஹல்காமின் உயர்தர செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்துச் தரச்சொல்லி, பிப்., 12, 15, 18, 21, 22 ஆகிய தேதிகளில் ஆர்டர்கள் வந்துள்ளன.
புகைப்படம்
பின், மார்ச் மாதம் எந்த ஆர்டரும் இல்லை. ஏப்., 22ல் பஹல்காம் தாக்குதல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன், அதாவது ஏப்., 12 அன்று மீண்டும் ஒரு ஆர்டர் வந்துள்ளது. இதன் பின்னர் மீண்டும் ஏப்., 24 மற்றும் 29 அன்றும் ஆர்டர்கள் வந்துள்ளன.
இன்னொரு விஷயமும் அரங்கேறியுள்ளது. பஹல்காம் மட்டுமல்லாமல் புல்வாமா, அனந்த்நாக், பூஞ்ச், ரஜவுரி, பாரமுல்லா ஆகிய ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்துத் தரச் சொல்லியும், மாக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் வந்துள்ளன.
ஒவ்வொரு செயற்கைக்கோள் புகைப்படத்தையும் எடுத்துத் தருவதற்கு, 3 லட்சம் ரூபாய் கட்டணமாக இந்த நிறுவனம் வசூலித்துள்ளது. புகைப்படத்தின் துல்லியம், தெளிவுத்தன்மையைப் பொறுத்து இந்தக் கட்டணம் மேலும் அதிகரிக்கும்.
பஹல்காம் செயற்கைக்கோள் புகைப்படங்களை எந்த நிறுவனம் அல்லது அமைப்பு எடுத்துத் தரும்படி கூறியது என்ற விபரத்தை, மாக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனம் மட்டுமே வெளியிட முடியும்.
ஆனால், சந்தேகத்துக்கிடமான பாகிஸ்தான் - அமெரிக்க தொழிலதிபர் ஒருவரது பங்களிப்பு இதில் இருப்பதன் வாயிலாக, இது பாகிஸ்தான் ராணுவத்துக்கான உதவி என்பதை யூகிக்க முடிகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.