தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தெரு நாய்கள் தொல்லையும்; தீராத விவாதமும்

 தெரு நாய்கள் தொல்லையும்; தீராத விவாதமும்

 தெரு நாய்கள் தொல்லையும்; தீராத விவாதமும்


ADDED : ஜன 17, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- வியாஸ் நாகேஸ்வரன் -

நாய்க்கடி மரணங்களை தடுக்க, ஒருபுறம் உச்ச நீதிமன்றம் ஆக்கப்பூர்வமான உத்தரவுகளை பிறப்பித்து வரும் சூழலில்; மறுபுறம் அந்த உத்தரவுகளை எதிர்த்து நாய் பிரியர்கள் குரல் கொடுத்து கொண்டே இருக்கின்றனர். முதிர்ச்சியான சமூகம் நன்மை எது? தீமை எது? என்பதை விவேகத்துடன் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது. அதை விடுத்து, கருணையையும், பச்சாதாபத்தையும் ஒன்றாக நினைத்து குழப்பிக் கொண்டால், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லாமல் போய்விடும்.

நாடு முழுதும் தெரு நாய்க்கடி சம்பவங்களால் உயிரிழப்புகளும், ரேபிஸ் நோய் தாக்குதல்களும் அதிகரித்த நிலையில், இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் தாமே முன் வந்து விசாரித்து வருகிறது.

கடும் அதிருப்தி

உயிரிழப்புகளை தடுக்க தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசிகள் செலுத்தி பின், பிடித்த இடத்திலேயே அவற்றை கொண்டு விட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.

அதே சமயம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெரு நாய்கள் வராமல் தடுக்க வேலி அமைக்கும்படியும் தெரிவித்திருந்தது.

அப்படி இருந்தும், தெரு நாய்களுக்கு ஆதரவாக நாய் பிரியர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜரானதால், கடந்த 13ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் கடு ம் அதிருப்தி அடைந்தது.

'நாய்கள் மீது அன்பு இருந்தால், அதை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்ளுங்கள். ஏன் தெருக்களில் அலைய விடுகிறீர்கள்? தெருக்களில் அலைவதால், அவை மக்களை கடித்து பயமுறுத்துகின்றன' என, உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது.

உயிரிழப்புகளை தடுக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வரும் சூழலில், நாய் பிரியர்கள் சமூகத்தின் நலனை பற்றி சிந்திக்காமல், அதை கடுமையாக எதிர்த்து வருவது தான், பெரும் விவாதங்களை எழுப்பி இருக்கிறது.

தடுப்பூசி

சமூக பாதுகாப்பு, விலங்குகளின் நலனுக்கு உகந்த வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை, கருணை என்ற பெயரில் நாய் பிரியர்கள் எதிர்ப்பது, எப்படி சரியாக இருக்கும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதைப் பற்றியும் நாய் பிரியர்கள் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

கடந்த 2024ல் மட்டும், தெருநாய்களால் கடிபட்ட நபர்களின் எண்ணிக்கை, சுமார் 37 லட்சம். இது 2023ம் ஆண்டை விட 7 லட்சம் அதிகம். நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கும். எனினும், நாய்களின் ஆக்ரோஷமான நடத்தையையோ, ஓயாமல் நாய்கள் குரைப்பதால், அங்கு நிலவும் இரைச்சலையோ எந்தவிதத்திலும் குறைக்க உதவாது.

நாய் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தெரு நாய்களை தற்போதைய நிலையில் விட்டு விடுவதும் அவ்வளவு அர்த்தமானதாகவும் தெரிய வில்லை. பசியுடனும், காயத்துடனும் தெரு நாய்கள் வீதிகளில் திரிவதை தான், நாய் பிரியர்கள் விரும்புகிறார்களா? என தெரியவில்லை.

கவலை

பொது இடங்களில் திரியும் தெருநாய்களை அகற்றுவது போன்ற ஒரு அடிப்படை பிரச்னையிலேயே, சமூகத்தில் ஒருமித்த கருத்து எட்டாமல் போனால், ஊழல், காற்று மாசு போன்ற சிக்கலான சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கவலை எழுகிறது.

தவிர, ஆக்கப்பூர்வமாக யோசித்து உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை எதிர்ப்பது, நாட்டின் வளர்ச்சியை மங்கலாக்கிவிடும். சமூகத்திற்கு போராடு வதற்கான உரிமை இருக்கிறது. ஆனால், எதற்காக போராடுகிறோம். அதனால் நன்மை கிடைக்குமா என்ற விவேகமும், பொறுப்புணர்வும் அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us