'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
ADDED : ஜூலை 29, 2025 09:18 AM

சென்னை, விமானத்தின் 'எமர்ஜன்சி' எனும் அவசர கால கதவை திறக்க முயன்ற மாணவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், துர்காப்பூர் செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புறப்பட தயாரானது. இதில் பயணம் செய்ய 164 பேர் இருந்தனர்.
விமானம் குறித்த நேரத்தில் ஓடுபாதையில் ஓட துவங்கியபோது, விமானியின் 'காக்பிட்' பகுதியில், அவசர கால கதவு திறப்பதற்கான எச்சரிக்கை அலாரம் அடித்தது.
இதை பார்த்து சுதாரித்த விமானி, விமான பணிப்பெண்களுடன் இது குறித்து கேட்டார்; விமானத்தையும் ஓடு பாதையில் அவசரமாக நிறுத்தினார்.
அவசர கால கதவு பக்கத்தில் அமர்ந்திருந்த, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த சர்க்கார், 27, என்பவரிடம் விசாரித்தனர். சென்னை ஐ.ஐ.டி.,யில் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவரான அவர், கவனக்குறைவாக அவசர கால கதவு 'பட்டனை' அழுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விமானி, அவரது பயணத்தை ரத்து செய்து, சென்னை விமான நிலைய போலீசில் மாணவரை ஒப்படைத்தனர். பின், ஒரு மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து துர்காப்பூருக்கு, விமானம் புறப்பட்டு சென்றது.
விமானத்தில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விமான பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

