நாகரிகம் தெரியாத முட்டாப் பய: எம்.பி.,; யாரடா சொல்ற முட்டாப் பயலே: எம்.எல்.ஏ.,; அரசு விழாவில் முகம் சுளிக்க வைத்த ஆளுங்கட்சியினர்
நாகரிகம் தெரியாத முட்டாப் பய: எம்.பி.,; யாரடா சொல்ற முட்டாப் பயலே: எம்.எல்.ஏ.,; அரசு விழாவில் முகம் சுளிக்க வைத்த ஆளுங்கட்சியினர்
ADDED : ஆக 02, 2025 11:41 PM

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் துவக்க விழா மேடையில், நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது தி.மு.க.,வை சேர்ந்த தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் இருவரும் ஒருவருக்கொருவர், 'முட்டாள்' என ஒருமையில் பேசி வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.
பேனரில் படம்
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்' நேற்று துவங்கியது.
காலை 9:30 மணிக்கு விழா மேடையில் கலெக்டர் ரஞ்ஜித் சிங், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், மருத்துவ அதிகாரிகள் இருந்தனர். 10:20 மணிக்கு எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணன் ஆகியோர் முகாமுக்கு வந்தனர்.
முகாம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரில், 'தேனி எம்.பி.,யின் படம் போடவில்லையே ஏன்' என தங்க தமிழ்செல்வன், கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார்.
பின்னர் நல வாரியம் மூலம் உதவித்தொகைக்கான காசோலை, சான்றிதழ் ஆகியவற்றை எம்.எல்.ஏ., மகாராஜன் இருவருக்கு வழங்கினார்.
அதன்பின் நலத்திட்ட உதவிகளை தங்க தமிழ்ச்செல்வனிடம் கொடுத்து வழங்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
அப்போது தங்கத்தமிழ்செல்வனிடம் இருந்த செக் கவரை பறித்து, பயனாளியிடம் மகாராஜன் வழங்கினார்.
உடனே, 'நீ கொடுக்கும் போது, நான் கொடுக்க கூடாதா' என எம்.எல்.ஏ.,விடம் எம்.பி., கடிந்து கொண்டு, 'நாகரிகம் தெரியாத முட்டாப்பய... அறிவு இருக்கா' என்று கேட்டார்.
இதில் மகாராஜன் டென்ஷன் ஆகி, 'யாரை பார்த்துடா முட்டாப் பயனு சொல்ற... ஏண்டா முட்டாப் பயலே... நான் யாருன்னு நினைச்சுக்கிட்டு இருக்க நீ' என ஒருமையில் திட்டினார். இதனால், இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
புரோட்டோகால் அதன்பின், 'நிகழ்ச்சி நடத்தும் முறை சரியில்லை, புரோட்டோகால் மெயின்டெய்ன் பண்ணவில்லை, புரோட்டோகால் தெரியாதவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்' என்று அதிகாரிகளை தங்க தமிழ்ச்செல்வன் கடிந்து கொண்டார்.
மேடையில் இருந்தவர்கள், இருவரையும் தனித்தனியாக சமாதானப்படுத்தினர். இதையடுத்து, துவக்க விழா நிகழ்ச்சி பாதியிலேயே முடிக்கப்பட்டு நன்றியுரை வாசிக்கப்பட்டது. மருத்துவ முகாம் தொடர்ந்து நடந்தது.