மாணிக்கம் தாகூருக்கு எதிராக காங்கிரசில் திடீர் கொந்தளிப்பு
மாணிக்கம் தாகூருக்கு எதிராக காங்கிரசில் திடீர் கொந்தளிப்பு
UPDATED : பிப் 19, 2026 04:00 PM
ADDED : பிப் 19, 2026 05:14 AM

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் சூழலில், நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில், 'கூட்டணி தொடர்பான கருத்துகளை, பொதுவெளியில் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை விமர்சித்து, 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற பாரதியாரின் கவிதை வரிகளை, சமூக வலைதளத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி., நேற்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், த.வெ.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், தி.மு.க.,வுக்கு எதிராகவும் பேசி வரும் மாணிக்கம் தாகூர், ஜாதிய வன்ம அரசியல் செய்வதாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, டில்லி மேலிடத்திற்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் அளித்த பேட்டி:
பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை தலைமையில், 30 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றால். அவர் வெற்றிகரமான தலைவராகி விடுவார். அதனால், ஜாதி அடிப்படையில், அவர் வெற்றி பெறக்கூடாது என்ற பின்னணி கணக்கில் தான் மாணிக்கம் தாகூர் செயல்படுகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமார், 'ஐந்து கட்சியிலிருந்து மாறி வந்தவர் செல்வப்பெருந்தகை' என, முகநுாலில் கூறியிருக்கிறார்.
மாணிக்கம் தாகூர், மயூரா ஜெயகுமார் ஆகியோர், தங்களின் ஜாதிய வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆட்சியில் பங்கு என்பதை மகிழ்ச்சியாக ஏற்கிறோம். ஆனால், மற்றொரு குதிரை மீது ஏறி அதிகாரம் பெறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி மேலிடத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் அனுப்பியுள்ள கடிதம்: பொதுவெளியில் கூட்டணி குறித்து கருத்து சொல்லக்கூடாது என அறிவுறுத்தியும், மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் அறிக்கை கொடுத்துள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுலை பிரதமராக்குவது தான் காங்கிரசாரின் லட்சியம்.
அதை பலவீனப்படுத்தும் வகையில், பா.ஜ., - அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மாணிக்கம் தாகூர் செயல்படுகிறார். மாணிக்கம் தாகூர் செயல்பாடுகள், காங்கிரஸ் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் விரோதமானவை.
தி.மு.க., தயவால் விருதுநகரில் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் நன்றி மறந்து செயல்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

