சிக்கலில் கரும்பு விவசாயி சின்னம்; என்ன செய்ய போகிறார் சீமான்?
சிக்கலில் கரும்பு விவசாயி சின்னம்; என்ன செய்ய போகிறார் சீமான்?
ADDED : பிப் 18, 2024 04:02 AM

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தில், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த சின்னத்தை, கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா என்ற கட்சிக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வழங்கி இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
வழக்கம்போல, வரும் லோக்சபா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து வருகிறோம். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
தேர்தல் விதிமுறை மற்றும் வரைவின்படி, கரும்பு விவசாயி சின்னம், நாம் தமிழர் கட்சிக்கு தான் வழங்க வேண்டும். ஆனால், இம்முறை அதை மாற்றி, வேறொரு கட்சிக்கு வழங்கி உள்ளனர்.
என்ன நடந்தது, நடக்கிறது என தெரியாது. ஆனால், பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் புதிதாக துவக்கியுள்ள கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது. அவர், இம்முறை தேர்தலில் போட்டியிடுவாரா, மாட்டாரா என்பது கூட யாருக்கும் தெரியாது.
தேர்தல் கமிஷனில், நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கேட்டு விண்ணப்பித்தபோது, விவசாயி ஏர் உழும் சின்னம், அரிக்கேன் விளக்கு, வண்டிச்சக்கரம் ஆகிய ஏதேனும் ஒன்றை தருமாறு கேட்கப்பட்டது. 'அவற்றை மாநில கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளோம். அதனால் அதை தர முடியாது' என்றனர்.
ஏற்கனவே தேர்தல் தேதி அறிவித்து ஒரு வாரம் கழிந்த பின் தான் தேர்தல் சின்னம் கொடுத்தனர். இப்போது, வேறொரு ரூபத்தில் சிக்கல் உருவாக்கி உள்ளனர். எங்கள் சின்னத்தை வோறொருவருக்கு ஒதுக்கி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி வளர்ந்து விட்டது. அது பலருக்கு பொறுக்கவில்லை. அதனாலேயே, உரிய சின்னம் கொடுக்காமல் ஏதேதோ செய்கின்றனர். ஏற்கனவே உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா உள்ளிட்ட ஆறு தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். நாம் தமிழர் என்றால், கரும்பு விவசாயி சின்னம் தான் என மக்கள் மனதில் ஆழ பதிய வைக்கப்பட்டு விட்டது. அந்த நிலையில், திடீரென அந்த சின்னம் கிடையாது என்றால் எப்படி?
தேர்தல் கமிஷனில் பேசப்பட்டு வருகிறது. எப்படியும் எங்களுக்கே கரும்பு விவசாயி சின்னத்தை தருவர் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால், நீதிமன்ற உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. நீதிமன்றம் எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து கட்டாயம் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.