நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்: கைவிடப்பட்ட கல் குவாரிகளில் காத்திருக்கும் ஆபத்து
நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்: கைவிடப்பட்ட கல் குவாரிகளில் காத்திருக்கும் ஆபத்து
UPDATED : மே 05, 2024 07:35 AM
ADDED : மே 04, 2024 10:32 PM

செங்கல்பட்டு:கைவிடப்பட்ட குவாரிகளில் குளிப்பதற்கு தடை விதித்து, உயிர் பலியை தடுக்க, சுற்றுச்சுவர் அமைத்து நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், வண்டலுார், பல்லாவரம் ஆகிய தாலுகாவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 40க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வந்தன.
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில், 1995ம் ஆண்டு கல் குவாரி துவங்கி, 2004ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பின், கீரப்பாக்கம், செட்டிப்புண்ணியம் பகுதியில், 2004ம் ஆண்டு துவங்கி, 2013ம் ஆண்டு நிறைவடைந்தது.
இந்த குவாரிகள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக நடத்தப்பட்டன. மேலும், ஒவ்வொரு குவாரியும் 100 அடி வரை தோண்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 200 அடி முதல் 400 அடிக்கு மேல் சட்டத்திற்கு புறம்பாக தோண்டப்பட்டுள்ளது. தற்போது குவாரிகள் மூடப்பட்டன.
இந்த குவாரிகளில், கடல்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. சுற்றிஉள்ள கிராமங்கள் மட்டுமல்லாமல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் குளிப்பதற்காக, விடுமுறை நாட்களில் வருகின்றனர்.
அப்போது, நீச்சல் தெரியாதவர்கள், ஆழமான பகுதிக்கு சென்று, பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் புலிப்பாக்கம், செட்டிபுண்ணியம், கீரப்பாக்கம் கல் குவாரி தண்ணீரில் குளிக்க சென்ற, 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கைவிடப்பட்ட கல் குவாரி பகுதிகளில், ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை. கல் குவாரிகளில், ஊற்றுநீர் மற்றும் மழைக்காலங்களில், தண்ணீர் தேங்கி நிற்கும். தண்ணீர் துாய்மையாக உள்ளதை குடிநீருக்கு பயன்படுத்தலாம்.
இதற்கிடையில், கைவிடப்பட்ட குவாரிகள் பகுதியில், பாதுகாப்பு சுவர் அமைக்கவும், எச்சரிக்கை பலகை வைக்கவும், கடந்தாண்டு ஜூலை மாதம், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. இதனால், கீரப்பாக்கம் கிராமத்தில் கைவிடப்பட்ட கல் குவாரியில், கடந்த 1ம் தேதி குளித்த கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கைவிடப்பட்ட கல் குவாரிகளில் உயிர் இழப்பை தடுக்க, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இதற்கான செலவை, குவாரிகள் நடத்திய தனியார் உரிமையாளர்களிடம் வசூலிக்க வேண்டும். இதை, ஊராட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும்.
- வி.தமிழ்செல்வன்,
சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கைவிடப்பட்ட கல் குவாரிகளில், தடுப்புச்சுவர் மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க, திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்தவுடன், ஊரக வளர்ச்சித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.
- ஆர்.இளங்கோவன்,
உதவி இயக்குனர், கனிமவளத் துறை, செங்கல்பட்டு.