தனியாகவா, அணியாகவா என்பது 'சஸ்பென்ஸ்': சொல்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்
தனியாகவா, அணியாகவா என்பது 'சஸ்பென்ஸ்': சொல்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்
UPDATED : டிச 29, 2025 02:34 PM
ADDED : டிச 29, 2025 04:47 AM

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள, ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேஷிய தலை நகர் கோலாலம்பூரில், நேற்று முன்தினம் நடந்தது.
அதில், விஜய் பேசியதாவது: சினிமா என்பது மிகப்பெரிய கடல். கரையோரமாக சிறிய மணல் வீடு கட்ட ஆசைப்பட்டேன். மாளிகையாக மாற்றிக் கொடுத்துள்ளீர்கள். என் ரசிகர்கள் 33 ஆண்டுகள் எனக்காக நின்றனர். அதனால், அடுத்த 33 ஆண்டுகள், அவர்களுடன் நிற்க முடிவெடுத்துள்ளேன். அவர்களுக்கு ஒன்று என்றால், அவர்கள் வீட்டு வாசலில் போய் நிற்க முடிவெடுத்துள்ளேன்.
எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த, என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய், நன்றி என வெறுமனே சொல்லி செல்பவன் கிடையாது. நன்றிக்கடனை தீர்த்துவிட்டுதான் செல்வான்.
வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டுமென்றால், சும்மா, வருவோர், போவோர் எல்லோரையும் எதிர்க்க முடியாது. வலுவான எதிரிகளை எதிர்த்தால்தான், வலுவாக இருக்கிறோம் என்பது தெரியும். விஜய் தனியாக வருவாரா அல்லது அணியாக வருவாரா என, சமீபகாலமாக பேச்சு வருகிறது. நாம் என்றைக்கு தனியாக வந்திருக்கிறோம்.
கடந்த 33 ஆண்டுகளாக மக்களுடன்தான் இருக்கிறோம். அப்போது, அது மிகப்பெரிய அணிதானே. இப்போதும், 'தனியாகவா, அணியாகவா என விளக்கமாக சொல்லவில்லையே' என தோன்றும், 'சஸ்பென்ஸ்' இருந்தால்தானே 'கிக்' இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

