உலகிலேயே பழமையான மொழி தமிழ்; இது அனைவரையும் கற்க துாண்டுகிறது: மோடி புகழாரம்
உலகிலேயே பழமையான மொழி தமிழ்; இது அனைவரையும் கற்க துாண்டுகிறது: மோடி புகழாரம்
ADDED : டிச 29, 2025 12:30 AM

புதுடில்லி: “உலகிலேயே பழமையான மொழியான தமிழ் மீது, உலகம் முழுதும் ஏராளமானோர் அன்பு வைத்துள்ளனர். இது அந்த மொழியை கற்றுக்கொள்ள அவர்களை துாண்டுகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமராக பதவியேற்றது முதல், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நரேந்திர மோடி பேசி வருகிறார். இதில் நாட்டின் பண்பாடு, கலாசாரம், மொழிகளின் சிறப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 129வது பகுதி நேற்று ஒலிபரப்பானது.
அதில் அவர் கூறியதாவது: உலகம் முழுதும் நம் இந்திய கலாசாரமும், மொழிகளும் முக்கிய இடங்களை பிடித்துள்ளன. இவற்றை வளர்க்க உலக நாடுகள் அனைத்தும் முயன்று வருவது பெருமைக்குரியது. குறிப்பாக, இந்திய மொழிகளை வளர்க்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
தென்பசிபிக் தீவு நாடான பிஜியில், இந்திய மொழியையும், கலாசாரத்தையும் மேம்படுத்த ஒரு பாராட்டத்தக்க முயற்சி நடந்து வருகிறது. அங்குள்ள புதிய தலைமுறையை, தமிழ் மொழியுடன் இணைக்க பல்வேறு நிலைகளில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், அங்குள்ள ராகிராகி பகுதி பள்ளி ஒன்றில் தமிழ் தினம் கொண்டாடப்பட்டது.
அன்றைய தினம், குழந்தைகள் தங்கள் மொழி மீதான பெருமிதத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்கள் கவிதைகள் வாசித்தனர்; உரைகள் நிகழ்த்தினர். தங்கள் கலாசாரத்தை மேடையில் நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் வசிக்கும் கன்னட குடும்பங்கள், தங்கள் குழந்தைகள் தாய்மொழியில் பேச, எழுத கற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக, அங்கு கன்னட பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இதுபோல், உலகம் முழுதும் இந்திய மொழிகளை வளர்க்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ். இந்த மொழி மீது உலகம் முழுதும் உள்ளவர்கள் அதிக அன்பு வைத்துள்ளனர். நம் நாட்டிலும், தமிழ் மொழியை ஏராளமானோர் விரும்புகின்றனர். இதனால், தமிழ் மொழியை ஆர்வத்துடன் அவர்கள் கற்றுக்கொள்ள துவங்கியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் சமீபத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், சின்னஞ்சிறு குழந்தைகள் கூட தமிழில் சரளமாக பாடல்கள் பாடினர். அவர்களின் தாய்மொழி ஹிந்தி; ஆனால் தமிழ் மொழியின் மீதான அன்பு, அவர்களை தமிழ் கற்கத் துாண்டியது. இதுதான் பாரதத்தின் ஒற்றுமை. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், உடலை அனைவரும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்திய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு 2026க்கான புத்தாண்டு வாழ்த்து களையும் தெரிவித்தார்.

