ADDED : மே 18, 2025 11:06 PM

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை தன் அதிரடி பேச்சு மற்றும் நடவடிக்கையால், கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுத்தது. நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவரான பின், தமிழக பா.ஜ., துாக்க நிலைக்கு சென்றுவிட்டது. இதனால், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக கடந்த 2011 முதல் 2019 வரை பணியாற்றிக் கொண்டிருந்த அண்ணாமலை, விருப்ப ஓய்வு பெற்று, பா.ஜ.,வில் 2020 ஆக., 25ல் இணைந்தார்.
திடீர் வேகம்
தமிழக பா.ஜ., தலைவராக 2021 ஜூலையில் பொறுப்பேற்றார். கடந்த ஏப்., 11 வரை தலைவராக பணியாற்றினார்.
அண்ணாமலை தலைவராவதற்கு முன், ஆளுங்கட்சியின் தவறுகளை விமர்சிப்பதில் மென்மையான போக்கை காட்டிக் கொண்டிருந்த பா.ஜ., அவருடைய வருகைக்குப் பின், திடீர் வேகம் எடுத்தது.
ஆளுங்கட்சியினர் தவறுகள் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டன.இதற்காக, தி.மு.க., தரப்பில் போடப்பட்ட அவதுாறு வழக்குகளையும் தைரியத்துடன் எதிர்கொண்டார் அண்ணாமலை.
அதேபோல, பா.ஜ.,வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் மற்ற கட்சியினர் தவறுகள் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளையும் நெத்தியில் அடித்து விமர்சித்தார் அண்ணாமலை.
தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதுடன், அக்கட்சி அமைச்சர்கள் சேர்த்துள்ள சொத்து மற்றும் ஊழல் பட்டியலை, 'தி.மு.க., பைல்ஸ்' எனும் பெயரில் அடுத்தடுத்து வெளியிட்டார்.
இது, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் துாக்கத்தை கெடுத்தது. அவரது அதிரடி நடவடிக்கைகள் மக்களை கவர்ந்தன. இளைஞர்கள், பா.ஜ., உள்ளே வரத் துவங்கினர். இதனால், பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., என்ற நிலை மாறி, பா.ஜ., அந்த இடத்துக்கு வந்தது.
அ.தி.மு.க.,வையும் சேர்த்தே விமர்சித்ததால், 'அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவராக இருக்கும் வரை, பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வெளிப்படையாக அறிவித்தார். இதை வைத்து, கூட்டணியை விட்டும் அ.தி.மு.க., விலகியது.
கொஞ்சமும் கவலைப்படாத அண்ணாமலை, ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த அனுபவத்தை வைத்து, பா.ஜ., தலைமையில் கூட்டணி ஏற்படுத்தி, அக்கூட்டணி வாயிலாக லோக்சபா தேர்தலை சந்தித்தார்.
தோல்வி தான் என்றாலும், பல இடங்களில் அ.தி.மு.க., வைக் காட்டிலும் பா.ஜ., கூடுதல் ஓட்டுகள் வாங்கி, இரண்டாம் இடம் பெற்றது; ஓட்டு சதவீதமும் அதிகரித்தது.
ஆனால், அண்ணாமலை திட்டத்தை ஏற்க மறுத்த பா.ஜ., தலைமை, மீண்டும் அ.தி.மு.க.,வோடு கைகோர்க்க விரும்பி, கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது.
இதற்கு முன்னதாக, தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை ஒதுங்க வைத்து, புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை கட்சி மேலிடம் நியமித்தது.
நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவராக கடந்த ஏப்., 11ல் பொறுப்பேற்றார். அப்போது, 'அண்ணாமலை புயல்; நான் தென்றல்' என கூறினார்.
அவர் தலைவராகி 35 நாட்கள் கடந்து விட்டன. ஆனால், தமிழகத்தில் பா.ஜ., என்ற கட்சி இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு சென்று விட்டதாக கட்சியினர் புலம்புகின்றனர்.
மீண்டும் யாத்திரை
தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்த ஓட்டுகளை அடிப்படையாக வைத்து, அடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலை பா.ஜ., தலைமையிலான கூட்டணி வாயிலாகவே எதிர்கொள்ளலாம் என கணக்குப் போட்டு, அதற்கேற்ப செயல்பட்டார் அண்ணாமலை.
கூடவே கட்சி வளர்ச்சிக்காக, தான் ஏற்கனவே 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் நடத்திய யாத்திரை போலவே, மீண்டும் ஒரு யாத்திரை நடத்தலாம் என திட்டமிட்டார். தி.மு.க., - அ.தி.மு.க.,வை விரும்பாதோருக்கான ஒரு வாய்ப்பாக பா.ஜ.,வை கொண்டு வர அண்ணாமலை நினைத்தார்.
இதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த, திட்டங்கள் தீட்டி வைத்திருந்தார்.
நயினார் நாகேந்திரன் அரசியலில் மேம்போக்காகவும் பக்குவமாகவும் நடந்து கொள்ளக் கூடியவர். அதனால், அவர் எல்லாவற்றிலும் மென்மையான போக்கையே கையாள்கிறார்.
அது தற்போதைய பா.ஜ.,வுக்கு ஏற்றதல்ல. கூடவே, தி.மு.க.,வை வீழ்த்தக்கூடிய வகையில் இல்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் பாக்.,கிற்கு இந்தியா பதிலடி கொடுத்ததை கொண்டாடும் வகையில், தமிழகம் முழுதும் பா.ஜ., சார்பில் மூவர்ண கொடி பேரணி நடக்கிறது.
ஆனாலும், அதுகுறித்த எந்த பரபரப்பான தகவலும் மக்கள் மத்தியில் இல்லை. பெயரளவுக்கு இயங்கும் கட்சியாக தமிழக பா.ஜ., மாறி விட்டது.அண்ணாமலை தலைவராக இல்லாத பா.ஜ.,வுடனான கூட்டணி என்பது, அ.தி.மு.க.,வுக்கும் சேர்த்தே சரிவை உண்டாக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -