ஸ்டாலினை சந்திக்க விரும்பாத தமிழக காங்., கோஷ்டி தலைவர்கள்
ஸ்டாலினை சந்திக்க விரும்பாத தமிழக காங்., கோஷ்டி தலைவர்கள்
ADDED : அக் 28, 2025 04:10 AM

காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் திட்டமிட்டு புறக்கணித்துள்ளன.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., சொக்கரின் பேரனும், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் மகனுமான சிவராஜா - சாலுபாரதி திருமணத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடத்தி வைத்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவரின் இல்லத் திருமண விழா, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் நிலையில், அவரை காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் வந்து வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், சிவராஜசேகரனை தவிர, காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் வரவில்லை.
மேடையில், காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் யார் யார் பேசுகின்றனர் என்ற கேள்வி எழுந்தபோது, அங்கு யாரும் இல்லை. இதனால், ராஜா சொக்கர் வரவேற்று பேசிய பின், அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தி பேசினார்.
திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை முதல்வர் வாழ்த்தினார். அவரது பேச்சை கேட்க, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் யாரும் அங்கு இல்லை.
மணமக்களை வாழ்த்தி முடித்து விட்டு முதல்வர் சென்ற பின், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், எம்.பி., மாணிக்கம் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமார், விஜய் வசந்த் எம்.பி., உள்ளிட்டோர் அறிவாலய திருமண மண்டபத்துக்கு வந்து, மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
மணவிழா அழைப்பிதழில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை படம் போடவில்லை என்பதால், அவர் புறக்கணித்து விட்டார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்தபோதும், அவரும் வராமல் தவிர்த்துள்ளார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முந்தைய நாள் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றுள்ளார்.
மேடையில் ஐந்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டு இருந்தன. அதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜா சொக்கர், சிவராஜசேகரன் , முதல்வரின் உதவியாளர் தினேஷ் ஆகியோர் மட்டும் அமர்ந்திருந்தனர்.
இதனால், முதல்வர் ஸ்டாலினுடன் வந்த அமைச்சர்களும், தி.மு.க., நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்தனர்.
தி.மு.க., கூட்டணியில் காங்., இருந்தாலும், வரும் சட்டசபைத் தேர்தலுக்கு விஜய் பக்கம் போக வேண்டும் என, காங்., தலைவர்கள் பலர் விரும்புகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தி.மு.க., தரப்போடு இணக்கத்தைத் தொடர, காங்., தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் விரும்பவில்லை.
அதனாலேயே, ராஜா சொக்கர் மகன் திருமணத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க விரும்பாமல், திருமணத்துக்கு தாமதமாக வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றதாக காங்., தரப்பில் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -

