'அப்படியெல்லாம் பேசக்கூடாது' சிதம்பரத்திற்கு தமிழக காங்., 'பூட்டு'
'அப்படியெல்லாம் பேசக்கூடாது' சிதம்பரத்திற்கு தமிழக காங்., 'பூட்டு'
ADDED : மே 20, 2025 05:26 AM

'இனிமேல் காங்கிரசை பலவீனப்படுத்தும் வகையில் பேசக்கூடாது' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி அறிவுரை கூறியுள்ளார்.
'இண்டி கூட்டணிக்கு இனி எதிர்காலமே இல்லை' என, சிதம்பரம் கூறியதை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய அளவில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு, நீங்கள் செய்த சேவைகள் என்ன; பட்டியல் போட முடியுமா? ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் பலமாக இல்லை.
பலம் இல்லை
ஏற்கனவே சம்பந்தமே இல்லாத ரோசய்யா என்பவரை அம்மாநில முதல்வர் ஆக்கினீர்கள். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை சிறைக்கு அனுப்பியதால், காங்கிரசுக்கு ஆந்திராவில் பலம் இல்லாமல் போனது.
கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அறிவாலயம் கீழ்தளத்தில், தி.மு.க., - காங்., கூட்டணி குறித்து பேச்சு நடத்தப்பட்டது.
அதில், தாங்களும் பங்கேற்றீர்கள். மேல்தளத்தில், கருணாநிதி மனைவி தயாளுவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடந்தது. அன்று நீங்கள்தான் நிதி அமைச்சர். காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் எனக்கூறி சுரேஷ் கல்மாடியை கைது செய்தீர்கள்.
ஆனால், தாங்கள் தற்போது பாராட்டும் இன்றைய பிரதமர் மோடி, 'காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல் நடக்கவில்லை' என, சுரேஷ் கல்மாடிக்கு சான்றிதழ் வழங்கி உள்ளார். அதன்பின், எப்படி காங்கிரஸ் பலமாக இருக்கும்?
பலவீனப்படுத்த கூடாது
தங்களுடைய பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி, காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் செயலாக மாறியுள்ளது.
'பா.ஜ., வலிமையான கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என, ராகுலுக்கு நெருக்கமான தலைவருக்குக்கூட தெரிந்து இருக்கிறது' என, தங்களை சுட்டிக்காட்டி, பா.ஜ., கட்சியை சேர்ந்த பிரதீப் பண்டாரி பேசியுள்ளார்.
இனி காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில், நீங்கள் பேசாதீர்கள். காமராஜர் ஆட்சி மலர வேண்டும் என, எங்களை போன்றவர்கள் உழைக்கிறோம். எங்களை சோர்வடைய செய்து விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -