ஐகோர்ட் உத்தரவுப்படி ஏ.டி.ஜி.பி.,யை சீருடையில் ஜீப்பில் அழைத்துச் சென்றது தமிழக போலீஸ்; கைது இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு
ஐகோர்ட் உத்தரவுப்படி ஏ.டி.ஜி.பி.,யை சீருடையில் ஜீப்பில் அழைத்துச் சென்றது தமிழக போலீஸ்; கைது இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு
UPDATED : ஜூன் 19, 2025 01:22 PM
ADDED : ஜூன் 19, 2025 12:25 AM

'சிறுவன் கடத்தல் விவகாரத்தில், கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்யவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று விளக்கம் அளித்த நிலையில், 'அவரை பணியிடை நீக்கம் செய்தது ஏன்?' என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், மணமகனின் சகோதரனான 17 வயது சிறுவனை மணப்பெண்ணின் தந்தை கடத்திய விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில், புதிய பாரதம் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில், ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. சீருடையுடன் கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராமை போலீசார் விசாரித்தனர். கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெயராம் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை, விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏ.டி.ஜி.பி., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில் போலீஸ் அதிகாரியான ஜெயராம் எந்தவிதமான காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.
'அவர் இரவு முழுதும் விசாரிக்கப்பட்டு இருக்கிறார். இத்தனைக்கும் அவர் இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரராக கூட இல்லை. அவரது கைது நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஏ.டி.ஜி.பி., கைது செய்யப்படவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு இருக்கிறார்' என்றார்.
அப்போது பேசிய நீதிபதி உஜ்ஜல் புயான், ''அப்படி என்றால் அவரை ஏன் பணி இடைநீக்கம் செய்தீர்கள்? அவர் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி. அவருக்கு நீங்கள் இதை செய்திருக்கக்கூடாது,'' என்றார்.
மற்றொரு நீதிபதியான மன்மோகன், ''நான் 18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம் நீதிபதிக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது,'' என்றார்.
இதையடுத்து, ஏ.டி.ஜி.பி., ஜெயராமின் பணி இடைநீக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை உடனடியாக கேட்டு சொல்லும்படி, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மூத்த போலீஸ் அதிகாரியான ஏ.டி.ஜி.பி., ஜெயராமை சென்னை உயர் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டதும், அவர் சீருடையிலேயே போலீஸ் வாகனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் வெளிப்படையாக அரங்கேறிய நிலையில், 'ஜெயராமை கைது செய்யவில்லை' என தமிழக அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது, குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்; ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஏ.டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்ய மாநில அரசு முடிவு செய்தால் அதில் தலையிட முடியாது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.,யிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தமிழக அரசு தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதியிடம் அறிவுறுத்துவோம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -