விண்ணப்பிக்காதவருக்கு தமிழக அரசின் பாரதியார் விருது?
விண்ணப்பிக்காதவருக்கு தமிழக அரசின் பாரதியார் விருது?
ADDED : ஜன 20, 2025 06:11 AM

மதுரை : தமிழக அரசு சார்பில் 2024 ஆண்டுக்கான பாரதியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்தாண்டு ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. ஆக., 15 கடைசி தேதி என அறிவித்ததையடுத்து பலரும் விண்ணப்பித்துள்ளனர். மகாகவி பாரதியார் பெயரில் சேவையாற்றியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.
மதுரை ஒத்தக்கடை அருகே ராஜகம்பீரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாரதியார் சிந்தனை மன்ற செயலாளருமான லட்சுமி நாராயணனும் விருதுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசு, பாரதியார் விருது பெற்றவர் விவரத்தை வெளியிட்டது. இதில் விண்ணப்பித்த யாருடைய பெயரும் பரிசீலிக்கப்படாமல், விண்ணப்பிக்காத ஒருவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக லட்சுமி நாராயணன் கூறியதாவது: கடந்தாண்டு பாரதியார் விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். அதில் எனது பெயர் உட்பட 30 பேர் பட்டியலை அளித்தனர். ஆனால் விருது வழங்கும் போது இப்பட்டியலில் இல்லாத ஒருவரது பெயரை அறிவித்தது கண்டு அதிர்ந்து போனேன்.
விண்ணப்பித்தோரை தேர்வு செய்யாதது ஏமாற்றத்தை அளித்ததுடன், அவமதித்ததாகவும் உணர்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி பெயரில் அமைப்பு நடத்தி வருகிறேன். அதற்காக எனக்குத்தான் தரவேண்டும் எனக்கூறவில்லை. பட்டியலில் உள்ளவர்களையே அரசு தேர்வு செய்திருக்க வேண்டும்.
கடந்தாண்டு விருதுக்கு சென்னை அண்ணாநகரில் வசிக்கும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜகுமார் என்பவருக்கு விருது வழங்க வலியுறுத்தியும் அவர் விண்ணப்பிக்கவில்லை எனக்கூறி விருது வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது இந்தாண்டு எப்படி விண்ணப்பிக்காதவருக்க விருது வழங்க இயலும். இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என்றார்.