நான்கரை ஆண்டுகளில் ஒரு மெகா வாட் கூட புதிதாக மின் உற்பத்தி செய்யாத தமிழகம்
நான்கரை ஆண்டுகளில் ஒரு மெகா வாட் கூட புதிதாக மின் உற்பத்தி செய்யாத தமிழகம்
UPDATED : டிச 23, 2025 06:46 AM
ADDED : டிச 23, 2025 04:55 AM

சென்னை: திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், மின் வாரியம் அமைத்து வரும் அனல், நீர் மின் நிலையங்களில், கடந்த நான்கரை ஆண்டுகளில், ஒரு மெகாவாட் கூட உற்பத்தி துவக்கப் படவில்லை.
இது தொடர்பாக, மின் வாரிய அதிகாரிகளிடம் நேற்று ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின், விரைவாக மின் திட்டங்களை முடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 800 மெகாவாட் திறனில் வட சென்னை - 3 மற்றும் 1,320 மெகாவாட் திறனில் எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம்; 660 மெகாவாட் திறனில், எண்ணுார் விரிவாக்கம் ஆகிய பெயர்களில், அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், 1,320 மெகா வாட் திறன்; ராமநாதபுரம் உப்பூரில், 1,600 மெகா வாட்டில் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் நீலகிரியில், 500 மெகா வாட் திறனில் குந்தா நீரேற்று மின் நிலையம், நாமக்கல் கொல்லிமலையில், 20 மெகா வாட் திறனில் நீர் மின் நிலையமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் கட்டுமான பணிகள், 2014 - 18 காலகட்டங்களில் துவங்கிய நிலையில், 2020 - 21ல் முடிக்க திட்டமிடப்பட்டது. இதில், வட சென்னை - 3 நிலையத்தில் மட்டும், 2024ல் மார்ச்சில் சோதனை மின் உற்பத்தி துவங்கியது. 72 மணி நேரம் உற்பத்தி செய்த பின், வணிக உற்பத்தி துவங்க வேண்டும். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், வணிக மின் உற்பத்தி துவங்கப்படவில்லை.
உடன்குடி மின் நிலையத்தின் முதல் அலகிலும், கடந்த செப்டம்பரில் சோதனை மின் உற்பத்தி துவங்கிய நிலையில், இன்னும் வணிக உற்பத்தி துவக்கப்படாமல் உள்ளது.
எண்ணுார் சிறப்பு, உடன்குடி மின் நிலைய இரண்டாவது அலகில் கட்டுமான பணி, 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. உப்பூர், எண்ணுார் விரிவாக்க மின் நிலைய பணிகள், 30 சதவீதத்துடன் ஐந்து ஆண்டுகளாக முடங்கியுள்ளன.
கொல்லிமலை நீர் மின் நிலையம், குந்தா நீரேற்று மின் நிலையம் கட்டுமான பணிகள், 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகளில் மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில், ஒரு மெகா வாட் கூட, மின் உற்பத்தி துவக்கப்படவில்லை.
இந்த மின் திட்டங்களின் நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் மின் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். அதில், மின் திட்ட பணிகள் தாமதம் குறித்து கேட்டறிந்தார்.
பின், மின் நிலைய கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, வரும், 2026 மார்ச்சுக்குள் மின் உற்பத்தியை துவக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

