ADDED : ஜன 05, 2024 04:06 AM

'என் மண் என் மக்கள்' பயணம், இன்னும் 104 தொகுதிகளை சந்திக்க இருக்கும் வேளையில், தினமும் மூன்று தொகுதிகள் என்ற அடிப்படையில், பாதயாத்திரையை முடுக்கி விட்டிருக்கிறோம்.
பிரதமர் மோடியின் திட்டங்கள், அதன் நன்மைகள் எப்படி மிக விரைவாக கடைக்கோடி மக்களைச் சென்றடைகிறதோ, அப்படியே இனி நம் பாதயாத்திரையும் விரைவாக பயணிக்கவுள்ளது.
ஏற்காடு
மலைகளின் இளவரசியாகப் போற்றப்படும் ஏற்காட்டில், பாதயாத்திரை பயணம் நடந்தது. அந்த சட்டசபைத் தொகுதியில் பயணம் வெகுச் சிறப்பாக நடந்தேறியபோது, பா.ஜ., மீது மக்கள் வைத்திருக்கும் மலையளவு நம்பிக்கை மனசைத் தொட்டது.
பிரதமர் மோடி, சேலத்துக்கு 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான 41.4 கி.மீ., தொலைவு சேலம் - -மேக்னசைட் சந்திப்பு, -ஓமலுார் -- மேட்டூர் அணை பகுதிக்கான ரயில் வழித் தடங்களை இருவழிப் பாதையாக்கும் திட்டத்தையும் சமீபத்தில் துவங்கி வைத்தார்.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு பணம் கிடைத்ததோ, அதை விட இரண்டரை மடங்கு அதிக பணத்தை பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது.
தாராளம்
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை அமைக்க, ரயில்வே துறையை நவீனப்படுத்த, லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு, மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள், இலவச மருத்துவ சிகிச்சை, தரமான வீடு, கழிப்பறை, குழாய் வாயிலாக குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற பல நலத் திட்டங்களை, மக்களுக்கு வழங்கி வருகிறது.
↓↓மத்திய அரசு, தமிழகத்திற்கு ஆறு ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை வழங்கியுள்ளது. அதில், 2,488 மலைவாழ் பழங்குடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கு, இந்த ஆண்டு 8.67 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆனால் தி.மு.க., அரசு, ஏற்காடு மலைக் கிராமங்களுக்கு சரியான சாலை வசதிகள் கூடச் செய்து தரவில்லை. அவசர காலங்களில் மருத்துவமனை செல்லும்போது கூட, துணியில் கட்டி தான் நோயாளிகளையும், கர்ப்பிணிகளையும் துாக்கிச் செல்லும் அவலநிலை உள்ளது
↓சேர்வராயன் மலை பகுதியில் உள்ள 93 குக்கிராம மக்கள், பல தலைமுறைகளாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளனர்
↓தமிழக அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் 2.69 லட்சம் கோடி ரூபாய் கடனை கூட்டி உள்ளது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களில், 'நம்பர் ஒன்' ஆக, தமிழகத்தை மாற்றி உள்ளனர்.
ஆத்துார்
இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனத்தால், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட கோட்டைகளில் ஆத்துார் கோட்டையும் ஒன்று. ஆத்துாரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற ஜவ்வரிசிக்கு, மத்திய அரசு, மார்ச் 2023ல் புவிசார் குறியீடு வழங்கியது.
கடந்த 2019ல், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 351 மாசடைந்த நதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம், ஆத்துார் தொகுதியில் உள்ள வசிஷ்ட நதிக்கு கிடைத்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள கூவம், அடையாறு, நொய்யல், தாமிரபரணி என்று ஒவ்வொரு நதியும் மாசுபட்ட நதிகளாக உள்ளன. இதை சரி செய்ய, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆத்துாரை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாலம் இல்லாததால் வசிஷ்ட நதியில், தண்ணீரில் இறங்கி கடந்து செல்கின்றனர்.
வாகன ஓட்டிகள், ஆற்றை கடக்க சிரமப்படுவதோடு, சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி அவதிக்கு ஆளாகின்றனர். இங்கு ஒரு பாலம் அமைக்கக் கூட, சரியான நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தி.மு.க., அரசு.
கெங்கவல்லி
இந்தப் பகுதியல் உள்ள தம்மம்பட்டி மரச் சிற்பங்கள், உலகப் புகழ் பெற்றவை. தம்மம்பட்டி மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர, தமிழக பா.ஜ., முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வரும் லோக்சபா தேர்தலில், தமிழக மக்களுக்காக உழைக்கும் நல்ல நபர்களை தேர்வு செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும்.
பயணம் தொடரும்...