தமிழக மின் உற்பத்தி கழகத்துக்கு முதல் ஆண்டில் ரூ.2,200 கோடி இழப்பு
தமிழக மின் உற்பத்தி கழகத்துக்கு முதல் ஆண்டில் ரூ.2,200 கோடி இழப்பு
ADDED : பிப் 21, 2026 07:48 AM

சென்னை: புதிய நிறுவனமாக துவக்கப்பட்ட தமிழக மின் உற்பத்தி கழகம், முதல் ஆண்டிலேயே, 2,229 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து, தமிழக மின் உற்பத்தி கழகம், தனி நிறுவனமாக, 2024ல் பிரிக்கப்பட்டது. இந்நிறுவனத்திற்கு, திருவள்ளூர், துாத்துக்குடி, சேலத்தில், 5,120 மெகா வாட் திறனில், ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன.
சென்னை, நாகை, ராமநாதபுரத்தில், 408 மெகா வாட் திறனில், மூன்று எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு விற்பது, அனல் மின் நிலையங்களில் வெளியேறும் சாம்பலை, தனியாருக்கு விற்பது போன்றவை காரணமாக, மின் உற்பத்தி கழகத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
இந்நிறுவனம், 2024 - 25ம் நிதியாண்டிற்கான வரவு, செலவு விபரங்கள் அடங்கிய, முதலாவது ஆண்டு அறிக்கையை, தற்போது வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டில், செயல்பாட்டு வருவாய், 16,028 கோடி; இதர வருவாய், 1,264 கோடி என, மொத்த வருவாய், 17,292 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இதே காலத்தில், மொத்த செலவு, 19,521 கோடி ரூபாயாக உள்ளது. இதன் காரணமாக, அந்த ஆண்டில், 2,299 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

