சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்; மோசமான சாலைகளே முதல் காரணம்!
சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்; மோசமான சாலைகளே முதல் காரணம்!
ADDED : பிப் 17, 2024 05:45 AM

சாலை விபத்துக்களில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு, பெரும்பாலான இடங்களில் மோசமான ரோடுகளே முதல் காரணமாக இருக்கிறது. ஆனால், டிரைவர்களே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு, டிரைவர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில், 10 சதவீதம் விபத்து அதிகரித்துள்ளதை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியே ஒப்புக் கொண்டுள்ளார்.
நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு 53 விபத்துகளும், 19 உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலைகளின் வடிவமைப்பே, பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, வரும் 2030க்குள் தற்போதுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
2021ல் உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி, உலக அளவில் உள்ள வாகனங்களில், இந்தியாவில் ஒரு சதவீத வாகனங்களே உள்ளன; ஆனால் சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கையில், இது 11 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு நாலரை லட்சம் விபத்துகள் நடக்கின்றன; ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனம், சாலை பாதுகாப்பு தொடர்பாக, கடந்த டிச.,13ல் வெளியிட்ட ஒரு சர்வதேச அறிக்கையின்படி, 2010க்குப் பின், உலக அளவில் ஆண்டுக்கு ஐந்து சதவீத விபத்துக்கள் குறைந்து வருகின்றன; ஆனால் இந்தியாவில் மட்டும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
கடந்தாண்டு நவம்பரில் வெளியான, 'இந்தியாவின் சாலை விபத்துக்கள் 2022' அறிக்கையின்படி, 2021 ஐ விட, 2022ல், தேசிய அளவில் 11.9 சதவீதம் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இறப்பு மற்றும் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை, முறையே 9.4 மற்றும் 15.3 சதவீதம் என்ற அளவுக்கு கூடுதலாகியுள்ளது.
பெரும்பாலான விபத்துக்களில், வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு, தவறு அல்லது வேகம் என்றே பதிவு செய்யப்படுகிறது.உண்மையில், ரோடுகளின் மோசமான நிலையும், வடிவமைப்புமே விபத்துகளுக்கு முக்கியக்காரணம். வேகத்தடைகள், சென்டர் மீடியன்முறைப்படி அமைக்கப்படுவதில்லை; வர்ணம் பூசப்படுவதில்லை; அறிவிப்புப் பலகை வைப்பதில்லை.
எச்சரிக்கைப் பலகை, ஒளிர் வண்ணங்கள், ஒளிர் விளக்குகள், ரோட்டைப் பிரித்துக் காட்டும் ஒளிர் பட்டைகள் இருப்பதில்லை. ரோடுகளில் குழிகள் உடனுக்குடன் மூடப்படுவதில்லை; பாதாள சாக்கடை மூடிகள், விபத்தை ஏற்படுத்தும் வகையில் மேடாக அமைக்கப்படுகின்றன; பாலங்கள் ஆபத்தான வளைவுகளுடன் கட்டப்படுகின்றன.
மோட்டார் வாகனச்சட்டம் 198ஏ மற்றும் 164 பி பிரிவின்படி, விபத்துக்குக் காரணமான ரோடு அமைப்புக்காக, கான்ட்ராக்டர், கன்சல்டன்ஸி அல்லது அதிகாரிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க முடியும்.
விபத்துகளுக்கு வருந்தும் தமிழக அரசு, முதலில் எடுக்க வேண்டிய நடவடிக்கை இதுதான்!
-நமது சிறப்பு நிருபர்-