சேத அறிக்கை தயாரிப்பில் மத்திய அரசிடம் நிவாரண நிதி பெற தமிழகம் புதிய உத்தி
சேத அறிக்கை தயாரிப்பில் மத்திய அரசிடம் நிவாரண நிதி பெற தமிழகம் புதிய உத்தி
ADDED : டிச 02, 2024 11:58 PM

சென்னை: கனமழை, வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஈடுசெய்ய, மத்திய அரசிடம் இருந்து நிவாரண தொகையை விரைந்து பெறும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்காக, வருவாய் நிர்வாக ஆணையருக்கு மட்டும் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், சேத மதிப்பீடு தயாரிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கெடுப்பு
இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது
இயற்கை பேரிடரின் போது, ஒவ்வொரு துறையினரும் கிராமம் வாரியாக தங்கள் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள், பொருட்சேதம் என, தனித்தனியே சேத மதிப்பீட்டை கணக்கெடுப்பர்.
பின், அவற்றை பகுப்பாய்வு செய்து, ஒட்டு மொத்த பாதிப்பு, நிதி தேவை விபரங்களை, கலெக்டர் தலைமையில் செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுவுக்கு அனுப்புவர்.
இது தவிர, அதே விபரங்களை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தங்களின் துறை உயரதிகாரிகளுக்கும் அனுப்புவர்.
கலெக்டர்கள் தங்கள் மாவட்டத்தில், ஒவ்வொரு துறைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு விபரத்தை தனித்தனியே மதிப்பீடு செய்து, ஒட்டுமொத்த நிதி தேவை குறித்து, வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிக்கை அனுப்புவர்.
இதேபோல, துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் விபரங்களை, அதன் உயரதிகாரிகளும், வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்புவர். இரு அறிக்கைகளிலும் வேறுபாடுகள் ஏற்படும். பின், இந்த அறிக்கைகள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தால் பகுப்பாய்வு செய்யப்படும்.
அதன் அடிப்படையில், பேரிடர் நிவாரண தொகை இறுதி செய்யப்பட்டு, அதை வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும். பின், மத்திய குழு வந்ததும், அதனிடம் அறிக்கை சமர்ப்பித்து, நிதி ஒதுக்க கோரப்படும்.
கசியாது
தற்போது, மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரணத்தை விரைவாக பெறும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவதற்கு பதில், சேத மதிப்பீடுகளை கலெக்டர்களுக்கு மட்டும் அனுப்புமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் வாயிலாக, அறிக்கைகள் விரைவாக தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் நிதி கேட்க முடியும்; சேத மதிப்பீடு விபரமும் கசிய வாய்ப்பில்லை. மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக உள்ளது. இதனால், தமிழகம் கேட்கும் நிதியில் பெரும்பகுதி வழங்க வாய்ப்புள்ளது.
எனவே, அறிக்கை தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டால், இழப்பீடு பெறுவதில் தடை ஏற்படும். அதற்கு இடம் அளிக்கக்கூடாது என்பதற்காகவே, அறிக்கையை விரைவாக தயாரிக்க, கலெக்டர்களிடம் மட்டும் சேத மதிப்பீடு அறிக்கையை வழங்குமாறு, ஒவ்வொரு துறையின் மாவட்ட அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.