தமிழக 'வாட்' வரியால் பெட்ரோல் விற்பனை 40 சதவீதம் குறைவு
தமிழக 'வாட்' வரியால் பெட்ரோல் விற்பனை 40 சதவீதம் குறைவு
ADDED : பிப் 10, 2024 06:57 AM

மதுரை: தமிழகத்தில் 20 சதவீதம் வாட் வரியால் பெட்ரோல், டீசல் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாக பெட்ரோல் டிரேடர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கப் பொருளாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழக வாட்வரி போர்ட்டலில் நாங்கள் மாதந்தோறும் வருமானத்தை தாக்கல் செய்கிறோம். எங்கள் பரிவர்த்தனையின் அனைத்து விபரங்களும் அதில் உள்ளது.
எங்கள் வர்த்தகத்தில் ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்குப் பிறகு, ஜி.எஸ்.டி., போர்ட்டலில் நாங்கள் வருடாந்திர ரிட்டர்ன் சமர்ப்பிக்கும் போது பூஜ்ஜியமாக இருக்கும். ஆனால் 'வாட்' அறிக்கை தாக்கல் செய்யும்போது 20 சதவீதம் வரி செலுத்தும் நிலை உள்ளது.
தமிழகத்தில் வாட் வரி விதிப்பு கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. இதனால் விற்பனை தமிழகத்தில் குறைந்துள்ளது. தமிழகம் வரும் வடமாநில வாகனங்கள், அருகேயுள்ள மாநிலங்களின் ஊர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்கின்றன.
அவர்கள் தமிழகத்தை தவிர்ப்பதால் அவற்றின் விற்பனை குறைந்துவிட்டது. இதனால் எங்களுடைய கொள்முதலும் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழக அரசு விரைவில் வாட் வரியை குறைத்து பெட்ரோல் விற்பனையை அதிகரிக்க முன்வர வேண்டும் என்றார்.