'டாஸ்மாக்' வசூல் வேட்டை: செந்தில் பாலாஜி கூட்டாளிகள் கைது
'டாஸ்மாக்' வசூல் வேட்டை: செந்தில் பாலாஜி கூட்டாளிகள் கைது
UPDATED : ஆக 01, 2026 07:40 AM
ADDED : ஆக 01, 2026 05:27 AM

சென்னை: 'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான, கரூரைச் சேர்ந்த கார்த்திக், 43, ரமேஷ், 45, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், மதுபானங்கள் விற்பனை மற்றும் கொள்முதலில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாகன் உட்பட ஏழு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.
அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி, விசாகன் மற்றும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் ரத்தேஷ் ராஜ் வீடு, மதுபான ஆலைகள் என, 45 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
அவற்றை ஆய்வு செய்தபோது, செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான, கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ், ஆகியோர், 'டாஸ்மாக்' நிர்வாகத்தில் தலையிட்டு வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்தது.
பாட்டிலுக்கு, 10 ரூபாய், டாஸ்மாக் அதிகாரிகளின் பணியிட மாற்றத்திற்கு பல லட்சம் ரூபாய் என, வசூலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியான ரத்தேஷ் ராஜ் என்பவரிடமும் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கைதாகி உள்ள ரமேஷ், கார்த்திக் ஆகியோர், த.வெ.க., ஆட்சியை சீர்குலைக்க, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, இரு தினங்களுக்கு முன் ஜாமினில் வந்திருந்தனர்.
