ADDED : மார் 19, 2025 05:57 AM

சென்னை : 'மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் நடந்த ஊழல், 1,000 கோடி ரூபாயை தாண்டலாம்' என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மதுபானங்களை தயாரித்து வழங்கிய, எஸ்.என்.ஜே., மற்றும் கால்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம், கடைசி மூன்று ஆண்டுகளுக்கான, 'சப்ளை' குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
அவற்றுடன், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, பெரிய அளவு வித்தியாசம் உள்ளது. டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கு, 3 - 5 லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டு உள்ளது. அதற்கான குறிப்பு ஒன்றும் சிக்கியது.
கலால் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆலைகளில் இருந்து கடைகளுக்கு நேரடி விற்பனை செய்ததில், பாட்டிலுக்கு, 30 ரூபாய் வரை அதிகமாக விலை வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, 'டிஜிட்டல்' ஆவணம் ஒன்றில், வரவு என, பதிவிடப்பட்டு உள்ளது.
முதற்கட்ட ஆய்வில், 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கலால் வரி ஏய்ப்பு, டெண்டர் முறைகேடு, கணக்கில் காட்டாமல் விற்கப்பட்ட மதுபானங்கள் குறித்த ஆய்வில், ஊழல் தொகை உயரலாம் என்று தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
