அரசின் கண்ணில் மண்ணை துாவி தங்கம் இறக்குமதி: சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி வரி ஏய்ப்பு
அரசின் கண்ணில் மண்ணை துாவி தங்கம் இறக்குமதி: சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி வரி ஏய்ப்பு
UPDATED : ஜூன் 15, 2025 07:06 AM
ADDED : ஜூன் 15, 2025 05:16 AM

புதுடில்லி: ஒரு கதவு மூடினால், மறு கதவு திறக்கும் என்ற நம்பிக்கை வாசகத்தை பலரும் சொல்வதுண்டு. தங்கம் இறக்குமதியில் இதுவே விதியாகிப் போனது விந்தை தான்.
தங்கத்தின் இறக்குமதி மீதான வரி 15 சதவீதமாக இருந்ததால், கடத்தல் தங்கத்தின் வருகை அதிகரித்தது. இதையடுத்து தங்க கடத்தலை தடுக்க, கடந்த பட்ஜெட்டில், வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதனால், கடத்தல் தங்கம் குறைந்ததோ இல்லையோ, வரி ஏய்ப்பு வாயிலாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்து விட்டது. அதுவும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி!
தங்கத்தின் இறக்குமதி வரியைக் குறைத்த அரசு, பிளாட்டினம் அலாய் இறக்குமதி விதியில் மாற்றத்தை அறிவித்தது. அதாவது, பல நாடுகளுடன் வரியற்ற வர்த்தக அனுமதியில் இருந்த பிளாட்டினம் அலாய் இறக்குமதியில், குறைந்தது 2 சதவீதத்துக்கு மேல் பிளாட்டினம் இருந்தால், வரிவிலக்கு வழங்கப்பட்டது.
இதை நுாதன வழியில் பயன்படுத்திக் கொண்ட தங்க வணிகர்கள் பலர், அலாய் இறக்குமதியில் 2 சதவீதத்துக்கு மேல் பிளாட்டினம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு, கூடவே அதில் 15 முதல் 98 சதவீதம் வரை தங்கத்தை கலந்து இறக்குமதி செய்யத் துவங்கினர்.
தங்கம் கலந்த அலாய் பொருட்களாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, அமிலங்கள் வாயிலாகவோ அல்லது அதீத வெப்பநிலைக்கு உட்படுத்தியோ தங்கத்தை தனியே பிரித்தெடுத்து விடுகின்றனர்.
இவ்வாறு தங்கத்தை பிரித்து எடுப்பதற்கான பிரத்யேகமான மையங்களை பெரிய தங்க வியாபாரிகள் சொந்தமாக வைத்திருக்கின்றனர். சிறு வியாபாரிகள், வெளியே கொடுத்து, தங்கத்தை பிரித்தெடுத்து காசு பார்த்து விடுகின்றனர்.
கடந்த நிதியாண்டில் இந்த வழியில் யு.ஏ.இ., ஜப்பான், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதியான அலாய் 1.12 லட்சம் கிலோ. அதிலிருந்து 15 சதவீதம், அதாவது, 16,800 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. ஒரு கிலோ தங்கம் 90 லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டால், 6 சதவீத இறக்குமதி வரியாக, அரசுக்கு 906 கோடி ரூபாய் நஷ்டம் என தெரிகிறது.
பிரித்து எடுக்கப்பட்ட தங்கம்
2020 - 21: 2,143 கிலோ
2024-25: 16,800 கிலோ
684% உயர்வு