ADDED : ஜூலை 31, 2024 04:55 AM

சென்னை : ஆசிரியர்களின் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிட்டோ ஜாக் ஆசிரியர் கூட்டமைப்பினர், நேற்று இரண்டாவது நாளாக, பள்ளிக்கல்வி துறையின் டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டனர். இதில், 300 ஆசிரியைகள் உள்பட, 1,100 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றைய போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
வலியுறுத்தல்:
அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 11 சங்கங்கள் இணைந்து, டிட்டோ ஜாக் என்ற கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப்பு சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; ஆசிரியர்களுக்கு வேறு அலுவல் பணிகள் வழங்கக்கூடாது.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வை, ஒன்றிய பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத நிலையில், புதிய போராட்டத்தை டிட்டோ ஜாக் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள, டி.பி.ஐ., வளாகத்தை மூன்று நாட்கள் முற்றுகையிடும் போராட்டம், நேற்று முன்தினம் துவங்கியது.
முதல் நாளில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இரண்டாவது நாளாக நேற்றும், டி.பி.ஐ., வளாகம் முன் கூடிய, 300 ஆசிரியைகள் உள்பட, 1,100 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
உரிய முடிவு
போராட்டத்துக்காக பிற மாவட்டங்களில் இருந்து வந்த ஆசிரியர்களின் வாகனங்கள், ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு, ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் ஆகியோரது குழுவினர் பேச்சு நடத்தினர்.
போராட்டத்தை நிறுத்துமாறும், அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, உரிய முடிவெடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்றைய போராட்டத்தில், சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பர் என்றும், கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் போராட்டத்தை வீரியமாக நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.