திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.2,000 கோடி டெண்டர் பணிகள் ரத்து
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.2,000 கோடி டெண்டர் பணிகள் ரத்து
ADDED : மே 21, 2026 06:01 AM

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மின் சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, இந்தாண்டு பிப்., முதல் வெளியிடப்பட்ட, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 'டெண்டர்' அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த பணிகளுக்கு புதிதாக டெண்டர் கோரி, 30 சதவீதம் குறைவாக விலைப்புள்ளி பெற்று, பணி ஆணை வழங்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் ஆகிய, தனித்தனி நிறுவனங்களாக, மின் வாரியம் செயல்படுகிறது. மின் கம்பி, டிரான்ஸ்பார்மர், மீட்டர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின் பகிர்மான கழகம் கொள்முதல் செய்கிறது.
அனல் மின் நிலையங்களில் பழுது, பராமரிப்பு, எரிபொருள், நிலக்கரி கையாளும் பணிகள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
ஆலோசனை
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், மின் வாரிய அதிகாரிகளுடன், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். மாலை தொடங்கிய ஆய்வு கூட்டம், இரவு வரை நடந்தது.
இதில், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், மின் வாரிய இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம், மின் உற்பத்தி கழகம் ஆகிய நிறுவனங்களில், கடந்த பிப்., முதல் அறிவிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வாரியத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகளை மேற்கொள்வது குறித்து, மின் வாரியத்தின் பி.எல்.டி.சி., எனப்படும், 'போர்டு லெவல் டெண்டர் கமிட்டி' முடிவு செய்கிறது. இதில், மின் வாரிய தலைவர் மற்றும் இயக்குநர்கள் உள்ளனர்.
அந்த மதிப்பிற்கு மேல் சென்றால், மின் வாரியத்தின் இயக்குநர்கள் குழு முடிவு செய்யும். இதில் மின் வாரிய தலைவருடன், எரிசக்தி, தொழில் துறை, நிதித் துறை செயலர்கள் உள்ளனர்.
முந்தைய ஆட்சியில், மின் வாரியத்தின் ஒப்பந்த பணிகளுக்கான மதிப்பீடு, அதற்கான செலவை விட கூடுதலாக தயாரிக்கப்பட்டு, டெண்டர் வெளியிடப்பட்டது.
உத்தரவு
இந்த தகவலை, மின் வாரிய தலைவர், புதிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அதன் அடிப்படை யில், இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டு, பல்வேறு நிலைகளில் உள்ள, பல டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அந்த பணிகளின் மதிப்பு சராசரியாக, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். இந்த பணிகளுக்கு புதிதாக டெண்டர் கோரி, ஏற்கனவே வெளியிடப்பட்ட மதிப்பீட்டு விலையை விட, 30 சதவீதம் குறைவா க விலை பெறுமாறு, அதிகாரிகளுக்கு அமைச்சர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
