மறக்க முடியாத அந்த நாள்...! நினைவு கூர்கிறார் ஜி.டி.கோபால்
மறக்க முடியாத அந்த நாள்...! நினைவு கூர்கிறார் ஜி.டி.கோபால்
ADDED : அக் 19, 2024 11:23 PM

சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கும் நம்பிக்கை இல்லை... நான் முடிவெடுத்து பின்னர் அவற்றை சரியாக செய்கிறேன்!
--மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பொன்மொழி இது.
எந்த துறையாக இருந்தாலும், அதில் டாடா தடம் பதிந்திருக்கும். இதில் ரத்தன் டாடாவின் பங்கு அளப்பரியது. இவர், கோவை வந்து, யு.எம்.எஸ்., ரேடியோ தொழிற்சாலையை பார்வையிட்டது குறித்து, யு.எம்.எஸ்., நிறுவனர் ஜி.டி.கோபால் நினைவுகூர்கிறார்.
கோவையில், ஜி.டி.குழுமம் சார்பில், 1947ம் ஆண்டு யு.எம்.எஸ்., ரேடியோ தொழிற்சாலை துவங்கப்பட்டது. இதில், கால்குலேட்டர், ரேடியோ, பூஸ்டர், ஆன்டெனா தயாரிப்பில் ஈடுபட்டோம். எங்கள் நிறுவன தயாரிப்பின் தரம் குறித்து அறிந்த ரத்தன் டாடா, 1980ம் ஆண்டு, பிரைவேட் ஜெட்டில் கோவை வந்தார். கோவை அவிநாசி சாலையில் உள்ள, ஜி.டி.நாயுடுவின் இல்லத்தில், எங்களை சந்தித்து, தயாரிப்பு குறித்து கேட்டறிந்து, ஒரு நாள் முழுவதும் இருந்தார்.
யு.எம்.எஸ்., நிறுவனத்தின் தயாரிப்புகள், ரத்தன் டாடாவுக்கு பிடித்துப் போனதால், டாடா நிறுவனத்தின் 'நெல்கோ' பிராண்டுக்கு, கால்குலேட்டர் ரேடியோ ஆகியவற்றை தயாரித்து தர வேண்டும் என்று விரும்பினார்.
அதன்படியே, யு.எம்.எஸ்., ரேடியோ தொழிற்சாலை சார்பில், 'நெல்கோ' பிராண்டுக்கு, இந்த உபகரணங்களை தயாரித்து வழங்கினோம். அக்கால பயன்பாட்டில், மிகச்சிறந்த பங்களிப்பாக இருந்தது.
கால மாற்றத்துக்கு ஏற்ப, யு.எம்.எஸ்., புதிய பரிமாணத்துடன் தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், பல்வேறு இயந்திரங்களுக்கான உபகரணங்கள், ராணுவ பயன்பாட்டுக்கான ஜெட் இன்ஜின் ஆகியவற்றை தயாரித்து வழங்கி வருகிறோம்.
ரத்தன் டாடா, கோவைக்கு வந்து, எங்கள் தயாரிப்புகள் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு நாங்கள் விநியோகித்திருக்கிறோம் என்பது, மறக்க முடியாத ஒன்று. அவருடன் ஒரு நாள் முழுவதும் இருந்தது, அவரின் பல திறமைகளை அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.
கோவை டவுன் ஹாலில் உள்ள மணிக்கூண்டு, வேளாண் பல்கலைக் கழகம் ஆகியவற்றை பார்க்க விரும்பினார். அவரை, அழைத்துச் சென்று காண்பித்தோம். ரத்தன் டாடா மறைவு, இந்தியாவுக்கே பேரிழப்பு.
இவ்வாறு, ஜி.டி.கோபால் கூறினார்.