பழம் பெரும் மாஜிக்கள் பா.ஜ.,வில் ஐக்கியம் கட்சியை வலுவாக்க அண்ணாமலை தந்திரம்
பழம் பெரும் மாஜிக்கள் பா.ஜ.,வில் ஐக்கியம் கட்சியை வலுவாக்க அண்ணாமலை தந்திரம்
ADDED : பிப் 08, 2024 03:42 AM

புதுடில்லி: தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் எம்.பி. 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பா.ஜ.வில் நேற்று இணைந்தனர். அவர்களை வரவேற்ற மத்திய இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்திலும் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் எம்.பி. 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் பா.ஜ.வில் நேற்று இணைந்தனர்.
புதுடில்லியில் மத்திய இணையமைச்சர்கள் ராஜிவ் சந்திரசேகர் எல். முருகன் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர்கள் கட்சியில் இணைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை வரவேற்று ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் இருந்து இந்த அளவுக்கு அதிகமானோர் கட்சியில் இணைந்துள்ளது அந்த மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கை காட்டுவதாக உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ. 370 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து எங்களுக்கு புதிய தொகுதிகள் கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள மாற்றங்களை பார்த்து ஒவ்வொரு இந்தியரும் அது தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். புதியவர்கள் கட்சியில் இருப்போருடன் இணைந்து வேகமாக தேர்தல் பணியாற்றி கட்சியை உயர்வான இடத்துக்கு கொண்டு சேர்ப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.

