700 ஆண்டுகள் முன்பே தீர்மானிக்கப்பட்டது அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி
700 ஆண்டுகள் முன்பே தீர்மானிக்கப்பட்டது அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி
UPDATED : ஜன 20, 2024 04:47 AM
ADDED : ஜன 20, 2024 04:46 AM

மதுரை: ''அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி, 700 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பது சமஸ்கிருத பாடல் ஒன்றை ஆராய்ச்சி செய்த போது தெரியவந்தது,'' என வேதசாஸ்திர, கணித ஆராய்ச்சியாளர் முனைவர் என்.கண்ணன் தெரிவித்தார்.
இவர் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைகழகத்தில் வேத-கலாச்சார துறைத் தலைவராகவும், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி கணித பேராசிரியராகவும் பணியாற்றியவர். சமஸ்கிருதத்திலும், வேத சாஸ்திரங்களிலும், கணிதத்திலும் ஆராய்ச்சிகள் பல செய்தவர்.
ஹிந்து தத்துவ ஞானி வேதாந்த மகா தேசிகர் படைத்த 'ரகுவீர கத்யம்' என்னும் புகழ்மிக்க சமஸ்கிருத காவியத்தின் பாடலை இவர் ஆராய்ந்த போது, அதனுள் புதைந்திருந்த நுட்பமான செய்திகளை தற்போது வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் 2024ம் ஆண்டு கட்டப்படும் என 700 ஆண்டுகளுக்கு முன்பே வேதாந்த தேசிகர் சூட்சுமமாக குறிப்பிட்டிருந்ததாக கூறுகிறார். அவர் கூறியதாவது:
![]() |
வேத எண் குறியீடுமுறை
இவர் தன்னுடைய கணித முறைகளை தன் பாடல்களில் பொதிந்து வைப்பதற்காக 'கடபயாதி' என்னும் வேத எண் குறியீடு முறையை கையாண்டார். வேத எண் குறியீட்டைப் பயன்படுத்தி, கணிதத்தின் உயர் கோட்பாடுகளை கவிஞர்கள்அழகிய கவிதைகளில் நேர்த்தியாக எழுதியிருப்பதை படிப்பது மகிழ்ச்சி தரும்.
கடவுள் ராமரை புகழ்ந்து தேசிகரால் எழுதப்பட்ட காவியம் ரகுவீர கத்யம். இது மகாவீர கத்யம் என்றும் அறியப்படுகிறது. இதில் ராமரின் வீரச்செயல்களையும், தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் தெளிவாக விவரிக்கிறார்.
இதில் யுத்த காண்டத்தில் கணித குறியீடுகள் கொண்ட வரியை பயன்படுத்தி இருந்தார். அதனை விரிவாக்கம் செய்து நான் ஆராய்ச்சி செய்தேன். அப்போது தான் ஸ்ரீராம பிரதிஷ்டை வருடமாகிய தற்பொழுது நடைபெறும் ஆண்டு 2024 என்பது மிக அற்புதமாக கணித முறையில் வெளிப்படுத்தப்படுவதை புரிந்து கொண்டேன்.
சோம வாரத்தில் (திங்கள் கிழமை), மிருகசிரிஷ நட்சத்திரத்தின் அதிபதி தினத்தில், மகர மாதம், விக்கிரம வருடம் 2080, தை மாதம் 8 கலி வருடம் 5124, சாலிவாகன சக வருடம் 1945, கொல்லம் வருடங்கள் முடிந்து 1198, என பல வகையில் தற்போதைய ஜனவரி 22, 2024ல் கோயில் கட்டப்படும் என தெளிவாக ஆனால் சூட்சுமமாக தேசிகர் குறிப்பிட்டுள்ளதை என்னால் அறியமுடிந்தது.
மிக நுட்பமான இந்த ஆராய்ச்சியை உயர் கணிதத்திலும், சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றவர்களே புரிந்துக் கொள்ள இயலும்.
தெளிவாகிறது
காலத்தால் அழியாத ராமாயணத்தின் முழு வடிவையும் இசையொத்த தாள வடிவில் விவரிக்கும் தேசிகரின் ரகுவீர கத்யமானது, புனித பூமியாகிய அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தை மிகச்சரியாக கணித்து முன்பே தீர்க்க தரிசனத்துடன் அறிவித்திருக்கிறது என்பது எனது ஆராய்ச்சியில் தெளிவாகிறது.அனைத்தும் இறை செயல் எனும் போது, சரித்திர நிகழ்வான அயோத்தி கோயிலின் பிராண பிரதிஷ்டையும் முன் கூட்டியே இறைவன் தீர்மானிக்காமல் நடக்குமா?
இந்த ஆராய்ச்சியை பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளேன். இவ்வாறு முனைவர் என்.கண்ணன் தெரிவித்தார்.