கீழடி அகழாய்வில் மத்திய அரசு கேள்வியில் தவறில்லை: தி.மு.க., அரசியல் செய்கிறது: பாண்டியராஜன் குற்றச்சாட்டு
கீழடி அகழாய்வில் மத்திய அரசு கேள்வியில் தவறில்லை: தி.மு.க., அரசியல் செய்கிறது: பாண்டியராஜன் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 21, 2025 02:30 AM

சென்னை: ''ஆரியர் -- திராவிடர் தத்துவத்தை கொண்டு வந்து, பிரிவினைவாதத்தை உருவாக்க தி.மு.க., முயற்சிக்கிறது. கீழடி அகழாய்வில் மத்திய அரசு கேள்வியில் தவறில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் குற்றஞ்சாட்டினார்.
அவர் அளித்த பேட்டி:
'கீழடி நாகரிகத்தை இந்திய நாகரிகம்' என, நான் சொன்னதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் தான் முதன்முதலாக, சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்டது.
கீழடியை வைத்து அரசியல் செய்யும் தி.மு.க., கீழடி அகழாய்வுக்கு ஒரு காசு கூட செலவு செய்யவில்லை.
தமிழகத்தில் இதுவரை, 39 இடங்களில் அகழாய்வு நடந்துள்ளது. அதில், 33 இடங்களில் அகழாய்வு செய்ய உத்தரவிட்டது அ.தி.மு.க., அரசு தான். ஈரோடு கொடுமணல் அகழாய்வில் இரும்பு பயன்பாடு கண்டறியப்பட்டது. பழனிசாமி முதல்வராக இருந்த போது தான், அங்கு அகழாய்வுக்கு முதலில் நிதி ஒதுக்கப்பட்டது.
'கீழடி என் தாய்மடி' என்ற வார்த்தையை உருவாக்கியது, நான் தான். அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அந்த கண்காட்சிக்கு, 'கீழடி என் தாய்மடி' என்று பெயர் சூட்டினேன்.
பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகமாக இருந்த அழகன்குளத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் மூன்று முறை அகழாய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இப்போது, எட்டு இடங்களில் அகழாய்வு நடக்கிறது.
நிபுணர்கள் அதிகம்
அதற்கு வித்திட்டது அ.தி.மு.க., அரசு. பழனிசாமி முதல்வராக இருந்த போது தான், 15 தொல்லியல் நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்வெட்டை படியெடுக்கும் நிபுணர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழகம் தான்.
கீழடி அருங்காட்சியகத்திற்கும் இடம் தேர்வு செய்து, விவசாயிகளிடம் இருந்து நிலத்தை வாங்கி முதற்கட்ட பணிகளை முடித்து, பழனிசாமி திறந்து வைத்தார்.
கடந்த 2006 முதல் 2011 வரை கீழடியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, அன்றைய கருணாநிதி அரசு ஏற்கவில்லை.
இந்த ஐந்து ஆண்டுகளில் தொல்லியல் ஆய்வுகளுக்கு, 9 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், பழனிசாமி முதல்வராக இருந்த நான்காண்டுகளில், ஆண்டுக்கு 105 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகளை, 10 ஆண்டுகளுக்குப் பின், அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையில் கி.பி., 5ம் நுாற்றாண்டிலிருந்து கி.மு., 5ம் நுாற்றாண்டு வரை அதாவது, 1,000 ஆண்டுகளில் ஏதாவது ஓராண்டைச் சேர்ந்த காலகட்டமாக, இந்த நாகரிகம் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
திசை திருப்புகின்றனர்
இதற்கு தான் மத்திய தொல்லியல் துறை விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். இதில், தி.மு.க., அரசியல் செய்கிறது.
அ.தி.மு.க., ஆட்சியில், கீழடியில் ஐந்து கட்ட அகழாய்வு நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதை, மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை தவறு என்றோ, செய்யக்கூடாது என்றோ யாரும் சொல்லவில்லை.
வைகை நதி நாகரிகத்திற்கும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. அதே எழுத்து வடிவங்கள் உள்ளன. ஆரியர் -- திராவிடர் தத்துவத்தை கொண்டு வந்து, பிரிவினைவாதத்தை உருவாக்க தி.மு.க., முயற்சிக்கிறது.
அதற்கு பதிலடியாகவே, பாரத நாகரிகத்தின் அடிப்படை தமிழர் நாகரிகம் என்று சொன்னேன். இதைத்தான் திசை திருப்புகின்றனர்.
கீழடியில் தமிழக அரசு நடத்திய ஐந்து கட்ட அகழாய்வு அறிக்கையை பற்றி, முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை. தமிழக அரசின் ஆய்வறிக்கையில், எந்த கேள்வியையும் மத்திய அரசு கேட்கவில்லை. கீழடியில் அ.தி.மு.க., செய்த சாதனைகளுக்கு, தி.மு.க., அரசு, 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.