ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் அபார வளர்ச்சியால் நாடே அதிர்ச்சி; சொல்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்
ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் அபார வளர்ச்சியால் நாடே அதிர்ச்சி; சொல்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்
UPDATED : மே 19, 2025 04:45 AM
ADDED : மே 18, 2025 11:00 PM

மதுரை : முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் அபார தொழில் வளர்ச்சியால் நாடே அதிர்ச்சியடைந்துள்ளது என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த 15 ஆண்டுகளும் தி.மு.க., ஆட்சி தொடரும் என்பது ஸ்டாலினின் பேராசையை காட்டுகிறது. ஸ்டாலின் குடும்ப தொழில் வளர்ச்சி இன்னும் விரிவடைவதற்காக ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகிறாரா.
'டான்' 'ரெட் ஜெயன்ட்' போன்ற நிறுவனங்கள் மூலம் படங்களை வெளியிட்டு, சினிமா போன்று ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகும் யோகம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒரே ஆண்டில் ரூ. பல்லாயிரம் கோடி முதலீடு உட்பட பல்வேறு நிலைகளிலே ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் தொழில் வளர்ச்சி அபாரமாக உள்ளது. இதை நாடே பார்த்து அதிர்ச்சியாகி கொண்டிருக்கிறது.
இனி தி.மு.க., ஆட்சி தொடரக் கூடாது என்று மக்கள் நினைக்கின்றனர். இதை உளவுத்துறை மூலம் தெரிந்து அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் தமிழகம் உள்ளது. இதில் இருந்து மக்களை மீட்க வேண்டும். அதற்கான வாய்ப்பு 2026 தேர்தல். அப்போது ஸ்டாலினின் கனவு நிறைவேறாது. அ.தி.மு.க., ஆட்சியை மக்கள் மலரச் செய்வர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.