UPDATED : டிச 04, 2024 04:13 AM
ADDED : டிச 04, 2024 01:17 AM

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த அமளி நேற்று ஓய்ந்து, இயல்புநிலை திரும்பியது.
பார்லிமென்டில் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து, அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் வன்முறை போன்ற பிரச்னைகளை எழுப்பி, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ஒரு வாரமாக சபை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.
இந்நிலையில், ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சமரச உடன்பாடு காரணமாக, லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இருசபைகளிலும் நேற்று அலுவல்கள் ஆரம்பித்தன.
லோக்சபா துவங்கியதும், உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின் போது, வன்முறை நிகழ்ந்த விஷயத்தை சமாஜ்வாதி எம்.பி.,க்கள் எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன. பின், அவர்கள் மீண்டும் சபைக்கு திரும்பினர்.
கேள்வி நேரம் முடிந்து ஜீரோ நேரம் துவங்கியதும், சம்பல் வன்முறை சம்பவம் குறித்து பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது சமாஜ்வாதி எம்.பி., அகிலேஷ், “சம்பல் வன்முறை திட்டமிட்ட சதிச்செயல். ஆளும் கட்சியும், அரசு தரப்பும், போலீசாரும் இணைந்து அங்கு வன்முறைக்கு துணை போய் உள்ளனர். அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் எதிரான வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளனர்.
“துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்,” என்றார்.
ராஜ்யசபாவில், விதி எண் 267ன் கீழ் 42 நோட்டீஸ்கள் நேற்று வழங்கப்பட்டிருந்தன. அதானி லஞ்ச விவகாரம், மணிப்பூர் கலவரம், டில்லி வன்முறை, சம்பல் பகுதி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்தக் கோரி அளிக்கப்பட்டிருந்த அந்த நோட்டீஸ்கள் அனைத்தையுமே சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நிராகரித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றன.
அப்போது, சமாஜ்வாதி எம்.பி., ராம்கோபால் யாதவ், “சம்பல் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் பலியாகியும், யார் மீதும் இன்னும் எப்.ஐ.ஆர்., போடப்படவில்லை. ''இது, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்பது தெளிவாக தெரிகிறது,” என்றார்.
- நமது டில்லி நிருபர் -