வியக்க வைக்கிறது இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு!
வியக்க வைக்கிறது இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு!
UPDATED : பிப் 20, 2024 04:31 AM
ADDED : பிப் 20, 2024 01:37 AM

''அமெரிக்க அரசியல் மற்றும் பிற துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு வியக்க வைக்கிறது,'' என, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் துாதர் கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ் தெரிவித்தார்.
கோவையில் நடந்த அமெரிக்க கல்வி நிறுவனங்களின் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த இவர், நம் நாளிதழுக்கு நேற்று அளித்த பிரத்யேக பேட்டி:
இந்திய மாணவர்கள் உலகளவில் சிறந்தவர்கள். அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்ற, 4,000த்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 35 சதவீதம் அதிகரித்திருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான சிறந்த நல்லுறவை காட்டுகிறது.
அமெரிக்கா கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வி அறிவுடன், பல்வேறு சவாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்தியா முழுதுமுள்ள கல்வி நிறுவனங்கள், குறிப்பாக, தென் மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு உள்ளன. அமெரிக்க கல்வி நிறுவனங்கள், இந்தியா உட்பட சர்வதேச மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க உறுதி பூண்டுள்ளன.
எல்லைகள் இல்லாத விண்வெளி!
பொதுவாக விண்வெளி மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சிகள், ஒரு தேசத்தை தாண்டி மனிதர்கள் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கின்றன. சந்திரயான் - 3 வெற்றி பெற்றது, கண்டங்களை கடந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இரு நாடுகளும் இணைந்து கூட்டாக உருவாக்கியுள்ள 'நிசார்' செயற்கைக்கோள் ஏவுதலை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் வளர்ச்சி, கல்வி, வணிகம், தொழிற்துறை என, பல வகைகளிலும் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. அனைத்து நிலைகளிலும், இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
இதற்கு தற்போதுள்ள அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் உள்ள இந்திய வம்சாவளிகளே சாட்சிகளாக உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, வணிக விண்வெளி கண்டுபிடிப்புகள் போன்றவை இரு நாடுகளின் ஒத்துழைப்பால் வெளியாகி வருகின்றன. இதன் வாயிலாக, உலக வெப்பமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
கடந்த 2022ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஜோ பைடன் இணைந்து செயல்படுத்திய முதலீட்டு ஒப்பந்தத்தின் வாயிலாக, இரு நாடுகளுக்கு இடையிலான முதலீடு, நிலையான வளர்ச்சியை எட்டும் என, நம்புகிறோம்.
சக்தி வாய்ந்த 'குவாட்' அமைப்பு
இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' உருவெடுத்துள்ளது.
உலக அரங்கில் 'குவாட்' அமைப்பு முக்கிய இடத்தை பிடித்துள்ளது; சக்தி வாய்ந்த, அதிகாரம் மிக்கதாக மாறியுள்ளது. அப்பகுதியில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது.
மோடி தலைமையிலான இந்தியா மற்றும்அமெரிக்கா உறவு வலுவாக உள்ளது.
இந்தியா மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இரு நாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கான புதிய ஒப்பந்தங்கள், இரு நாட்டு உறவை பலப்படுத்துகின்றன.
இந்திய பொருளாதார வளர்ச்சி ஆற்றல் மிக்கதாக, நம்ப முடியாத அளவில் உள்ளது. இந்தியாவின் உலகளாவிய பொருளாதாரம் அதிகரித்துஉள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

